High Court: கோவையில் யானைகள் வழித்தடத்தில் அமைந்திருந்த செங்கல் ஆலைகள் குறித்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை அதிருப்தி அளிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


கோவை தடாகம் பகுதியில் உள்ள யானைகள் வழித்தடத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட செங்கற்சூளை குறித்து பத்திரிக்கை செய்தி வெளியானதையடுத்து, பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்காக விசாரணை நடத்தி வருகிறது. 


பசுமைத் தீர்ப்பாயம்:


இதனையடுத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த விசாரணை அறிக்கையின் படி, 177 செங்கல் ஆலைகளால், 373.74 கோடிக்கு 11077276 கன மீட்டருக்கு மண் கொள்ளை நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  நீர் வழித்தடங்கள் உட்பட சுமார் 67 கோடிக்கு சூழலியல் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செங்கல் சூளையிடமிருந்து 59 கோடியே 32 லட்சம் இழப்பீடாகப் பெறவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பசுமை தீர்ப்பாய வழக்கு ஒரு புறம் தீவிரமாக சென்றுகொண்டு இருக்க, சமூக ஆர்வலர் முரளீதரன் என்பவர் தொடரந்த பொதுநல வழக்கில், கோவையில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கற்சூளைகளால் யானைகள் வழித்தடம் முற்றிலும் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கின் விசாரணையை அடுத்து கோவையில் 180 செங்கற்சூளைகள் மூடப்பட்டது. ஆனால் இன்னும் 140க்கும் மேலான செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றம் செங்கற் சூளைகளை மூட உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


அதிகாரிகளுக்கும் தொடர்பு:


கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி இந்த பொதுநல வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், 23 சூளைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். அதிகாரிகள் செங்கள் சூளைகாரர்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரிகிறது என கூறியுள்ளனர். 


இந்த வழக்கு தொடர்பாக அடுத்து டிசம்பர் 22ஆம் தேதி விசாராணை நடைபெறும் எனவும், அப்போது, இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முழு விபரமான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினால் கோவை மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி இயங்கும் அனைத்து செங்கற்சூளைகள் மூடப்படவுள்ளது. 


யானைகள் நடமாட்டத்தால் அச்சம்


கோவை மாவட்டம் வால்பாறை அருகே சுமார் 20 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில், தேயிலை தோட்டத் தொழில் முக்கிய வாழ்வாதரமாக உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் வால்பாறை இருந்து வருவதால், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கிராமப் பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைவது வழக்கம். 


வால்பாறை மற்றும் மானம்பள்ளி வனச்சரகங்கள் அடர் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இப்பகுதிக்கு அருகில் தேயிலை தோட்டங்கள் உள்ளதால் வனப் பகுதியை விட்டு வெளியே வரும் யானை, சிறுத்தை, மான், புலி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் தேயிலை தோட்டம், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் தென்படுகிறது. அண்மை காலமாக அப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானைகள் ரேசன் கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தும் தொடர்ந்து நடந்து வருகிறது