கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துளிர் திட்டத்தின் கீழ் ராத்த சோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பேரீட்சம் பழம் மற்றும் நீராபானம் ஆகிய சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சத்துணவுகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை பரிசோதனை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பெண்கள் அதிகளவில் ரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் உடல் நல ஆரோக்கியம் அவர்களின் படிப்பிற்கும், உடலுக்கும் முக்கியம். ரத்தசோகையில் இருந்து பெண்களை மீட்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. 1500 மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 240 பேருக்கு ரத்தசோகை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இரும்பு சத்து மாத்திரைகளை குழந்தைகள் சாப்பிடுவதில்லை. அதனால் குழந்தைகளுக்கு பேரீச்சம்பழம், நீரா பானம் கொடுத்துள்ளோம். கோவை தெற்கு தொகுதியில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இதனை செயல்படுத்துகிறோம்.


மழைக்காலங்களில் கோவை ராமநாதபுரம் பகுதியில் மழை நீரோடு, கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் செல்கிறது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்க உள்ளேன். அப்பகுதியில் மழை நீர் செல்ல வடிகால் அமைக்கும் பணிகள் பருவமழைக்கு முன்பே முடித்திருக்க வேண்டும். தற்போது 63 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இது போன்ற பருவமழை காலத்திற்கு முன்பே முடிக்க வேண்டிய பல வேலைகளை முடிப்பதில்லை. இதனை சரி செட்ட குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, அம்மக்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப உதவி செய்யும். சிறப்பு அந்தஸ்து இருந்ததால் வேலை வாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள் உருவாக்க முடியாத நிலை இருந்தது. பெண்கள் வேறு மாநில இளைஞர்களை திருமணம் செய்தால் சொத்துகளை இழக்க வேண்டியிருந்தது. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். அம்மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்கள்.


சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வழியில் வழிமறித்து ஆளுங்கட்சியினர் குடோனுக்கு கொண்டு சென்று, கட்சி ரீதியாக கொடுப்பதாக புகார் வருகிறது. இதனை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு நிவாரண பொருட்கள் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்ததை கவனத்தில் கொண்டு முதல்வர் அரசிற்கு  கெட்ட பெயர் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.


முன்னணி கதாநாயகர்கள் நிவாரண உதவிகளை செய்வதில்லை என்பது நடிப்பது மட்டும் எங்கள் வேலை என அவர்கள் சொன்னால், யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு சில நேரங்களில் பேசும் ஒரு சில வசனங்களால் தான் கேட்கிறார்கள். எல்லோரும் ஒரே மாதிரி பேசுகிறார்களா, ஆட்சிக்கு தகுந்த மாதிரி பேசுகிறார்களா என மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் கடந்த முறை புயல் பாதிப்பின் போது என்ன பேசினார்? கமல்ஹாசன் சிறந்த நடிகர். ஆனால் மக்கள் துயரத்தில் பங்கேற்பது தான் அரசியல் பணி. வசனம் பேசுவது அல்ல அரசியல். அரசியல் என்பது மக்களுக்கான பணி. அதனால் தான் எந்த பிரச்சனை என்றாலும், உடனே பாஜக களத்தில் இறங்கும்.


சென்னை பாதிப்புகள் வெளியே தெரியக்கூடாது என மின்சாரம் மற்றும் இணைய தொடர்பை துண்டித்தார்களா எனத் தெரியவில்லை. சென்னையில் பிரச்சனை இல்லை திமுக ஊடகங்கள் சொல்லின. ஆனால் பல பகுதிகளில் மக்கள் துயரத்தில் கொதிப்படைந்து உள்ளார்கள். சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், நிவாரண பணிகளையும் முழுமையாக செய்யவில்லை. வங்கி கணக்கில் நிவாரண தொகை தர வேண்டும். டோக்கன் வழங்குவது குழறுபடிகளை உருவாக்கும். குளறுபடி ஏற்படாமல் இருக்க வங்கி கணக்கில் பணம் தர வேண்டும். நிவாரண உதவியை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.