பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அண்மையில் சென்னையில் திராவிடர் கழகம் நடத்திய விழாவில் பேசிய, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, "இந்துவாக இருக்கும் வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சமன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" என்று, இந்துக்களை, இழிவுப்படுத்தும் வகையில், விஷத்தை கக்கியிருக்கிறார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வையும், இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது என்பதற்கு ஆ.ராசாவின் இந்த பேச்சை விட வேறு உதாரணம் தேவையில்லை. பல ஆண்டுகள், பல துறைகளின் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என, முக்கியப் பொறுப்பில் ஒருவர் இப்படி பேசியதற்கு, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. ஆ.ராசாவின் கருத்தை தி.மு.க. ஏற்கிறதா, இல்லையா என்பதை முதலமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
"ஸ்ரீரங்கம் கோவில் முன்பு, கடவுளை நம்புபவன் முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி போன்ற வாசகங்களுடன் பெரியார் சிலை இருக்கலாமா?” என கேட்ட திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனை தி.மு.க. அரசு கைது செய்தது. அதுபோல, ஆ.ராசாவையும் தி.மு.க. அரசு கைது செய்யுமா என்பதை முதலமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
பிறப்பின் அடிப்படையிலான எந்த வேறுபாட்டையும் தீண்டாமையும் ஆர்.எஸ்.எஸ்.ஸும், பா.ஜ.க.வும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸிலும், பா.ஜ.க.விலும் இருப்பவர்களுக்கு ஒருவரையொருவர் என்ன ஜாதி என்பதும் தெரியாது. ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு வந்த மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதை நேரில் கண்டு பாராட்டியிருக்கிறார்கள்.
மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் எந்த கோட்பாட்டையும் பா.ஜ.க. எதிர்க்கும். இந்து மதம் என்பது எப்போது தோன்றியது என்பது தெரியாத அளவுக்கு மிகப்பழமையானது. இந்து மதம், மற்ற மதங்களைப் போல நிறுவனம் அல்ல. இந்து மதத்தை ஒரு தனி நபரோ, நிறுவனமோ கட்டுப்படுத்தவில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது.
இந்து மதத்தில் உள்ள சில வேறுபாடுகளை வைத்து, இந்துக்களை மதம் மாற்றி, இந்தியாவை பிளந்து கொண்டிருக்கிறார்கள். மதமாற்றத்தால் தான், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் உருவாகின. எனவே தான், மதமாற்றத்தை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கிறது.
ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் உருவான நீதிக் கட்சியின் தொடர்ச்சியே திமுக. சிறுபான்மை மதத்தினர் திமுகவின் முக்கிய வாக்கு வங்கியாக இருப்பதால், சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக, அவ்வப்போது இந்துக்களை சீண்டிக்கொண்டே இருப்பார்கள். அதைத்தான் இப்போது ஆ.ராசா செய்திருக்கிறார். வெளிப்படையாக மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இதுபோன்ற வெறுப்பை விதைக்கும் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
இது தகவல் தொழில்நுட்ப யுகம். எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு, இந்துக்களை தந்திரமாக ஏமாற்றி விடலாம் என தி.மு.க.வினர் கனவு காண வேண்டும். தி.மு.க.வின் தந்திர அரசியலையும், பிரிவினை அரசியலையும் தமிழர்கள் உணரத் தொடங்கி விட்டனர். தி.மு.க.வின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது. அதனால்தான், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினர் முழுமையாக தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தும், அ.தி.மு.க. - பா.ஜ.க. அணியை விட சுமார் 6 சதவீதம் மட்டுமே அதிகம் பெற முடிந்துள்ளது. அதுவும் 10 கட்சிகள் கூட்டணியை வைத்துக் கொண்டும் இதுதான் தி.மு.க.வின் நிலை.
சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கு அதிகரிக்க, அதிகரிக்க, இந்துக்களின் ஆதரவை தி.மு.க. இழந்து வருவதை, 2021 சட்டப்பேரவை தேர்தல் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே, காலம் மாறிவிட்டது. தமிழர்கள் விழித்துக் கொண்டுவிட்டனர் என்பதை உணர்ந்து தி.மு.க. செயல்பட வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.