பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இடதுசாரிகள், திமுக, காங்கிரஸ் கட்சியினர் எந்த மேடை கிடைத்தாலும், 'ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம்' என வகுப்பெடுப்பார்கள். ஏதோ கருத்துச் சுதந்திரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்தது போல எழுதுவார்கள். மேடைகளில் முழங்குவார்கள். இந்து மதத்தையும், இந்து மத கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையில் வெளிவரும் திரைப்படங்களுக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்தால், 'படத்தை படமாக பார்க்க வேண்டும், படைப்பை படைப்பாக பார்க்க வேண்டும்' என்று எல்.கே.ஜி. குழந்தைக்கு பாடம் நடத்துவது போல அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள்.


ஆனால், அவர்களின் குறைகளை, கபட அரசியலை சுட்டும் திரைப்படங்கள், புத்தகங்கள் வந்தால், இதுவரை பேசி வந்த கருத்துச் சுதந்திரத்தை அப்படியே மூட்டை கட்டி வைத்து விட்டு, பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் மீதும், உண்மையிலேயே கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவர்கள் மீதும், 'வெறுப்பரசியலை விதைக்கிறார்கள், மத மோதலுக்கு வழிவகுக்கிறார்கள்' என வகைவகையாய் வசை பாடுவார்கள். இப்படி தங்களின் அரசியல் சுய லாபத்திற்காக, இரட்டை வேடம் போடும் இடதுசாரிகள், காங்கிரஸ் திமுகவினரின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது, மே 5-ம் தேதி திரைக்கு வந்து இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம்.


காதல் என்ற பெயரில் இளம் பெண்களை ஏமாற்றி, வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களை பயங்கரவாத இயக்கங்களில் இணைத்து விடும் நிகழ்வுகள் இந்தியாவில் சமீப ஆண்டு காலமாக அதிகரித்திருக்கின்றன. நம் பக்கத்து மாநிலமான கேரளாவில்தான் இது அதிகம். இளம்பெண்களை ஏமாற்றி பயங்கரவாத இயக்கங்களில் சேர்த்து விடும் போக்கு குறித்து பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் மட்டும் பேசவில்லை. கேரளாவில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளும் பேசி வருகின்றன. `கத்தோலிக்க பெண்களையும், இளைஞர்களையும் லவ் ஜிகாத், போதை ஜிகாத் மூலம் வீழ்த்துகிறார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்திச் சண்டையிட முடியாத பகுதிகளில் இது போன்ற சூழ்சிகளைச் செயல்படுத்துகின்றனர்" என கேரள மாநிலம், கண்ணூர் பாலா மறை மாவட்ட பேராயர் மார் ஜோசப் கல்லறங்காட், கடந்த 2021 செப்டம்பரில் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார். இவையெல்லாம் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த செய்திகள் தான்.


இப்படி உண்மை சம்பவங்களின் அடிப்படையிலும், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டும், பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரடியாக பேசியும் உருவாக்கப்பட்டது தான் 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம். 20, 25 ஆண்டுகள் பெற்று, வளர்த்து படிக்க வைத்த தங்கள் பெண் குழந்தைகள், சிலரால் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளில் பயங்கரமாக இயக்கங்களில் சேர்க்கப்படுவது அந்த பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய துயரம்? இதனால் எத்தனை எத்தனை ஆயிரம் குடும்பங்கள் சீரழிகின்றன? இதனால் நாட்டுக்கும் பேராபத்து. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைத்தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் செய்திருக்கிறது.


உண்மை சம்பவங்களின் அடிப்படையில், எடுக்கப்பட்ட உண்மை பேசும் இந்த திரைப்படத்தை தான் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திமுகவினர் எதிர்க்கின்றனர். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு விடுமோ என்று அவர்களின் அச்சமும், பதற்றமும் புரிகிறது. நம் நாட்டில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எத்தனையோ திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. உண்மை சம்பவம் என்று சொல்லப்பட்ட படங்களிலேயே பல்வேறு மாற்றங்களை செய்து அதனை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக சித்தரித்திருக்கின்றனர். 


'தி கேரளா ஸ்டோரி’ படம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. எந்த மதத்தின் நம்பிக்கைகளும் அதில் கேலி, கிண்டல் செய்யப்படவில்லை. மதத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதுதான் கதை. 'மலக்குழி மரணம்' என்ற தலைப்பில் திரைப்பட உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி என்பவர் எழுதிய கவிதையும், இந்து மத கடவுள்களான ஸ்ரீராமரையும், சீதா தேவியையும் இழிவுபடுத்தியுள்ளார். இதை நியாயப்படுத்தி படைப்புச் சுதந்திரம் என பேசி வருகின்றனர். ஆனால், 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மட்டும் தடை விதிக்க வேண்டுமாம்.


தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிட விடாமல் தடுக்க குறுக்குவழியை திமுக அரசு கையாண்டுள்ளது. மத அடிப்படைவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து, திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என திமுக அரசு கைகழுவியுள்ளது. 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்களும் மிரட்டப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டிய கடமையில் இருந்து திமுக அரசு தவறிவிட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளிய திமுக அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?எனவே, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் தங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உண்டு என்பது திமுக, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் கட்சியினர் உணர வேண்டும். தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.