கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை; சாலைகளில் தேங்கிய வெள்ளநீர்; வேரோடு சாய்ந்த மரங்கள் - மக்கள் அவதி

கனமழை காரணமாக ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அடுத்தடுத்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கோடை காலம் நிலவி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் நிலவி வந்தது. கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே காணப்பட்டது.

Continues below advertisement

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இன்று காலையில் வெயில் சற்று அதிகமாக இருந்தாலும், மாலை நேரத்தில் கோவை மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், ராமநாதபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், வெள்ளலூர், சுந்தராபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.


கனமழை காரணமாக ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அடுத்தடுத்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதேபோல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களிலும், ரயில்வே சுரங்கப் பாதையிலும், மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்து இருப்பதால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக மழை நீர் தேங்கியதால் அவிநாசி சாலை பாலம், கிக்காணி பாலம் ஆகியவை மூடப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும் இரவு நேரத்தில் வீடு திரும்பியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் அதிவேக மோட்டர் பொருத்தி மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் பொருத்திய வாகனம் மூலம் உறிஞ்சி நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனிடையே கனமழையில் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீர் வெளியேற்றும் பணிகளை கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார்.


பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழை காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் மழைக்காலங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும், மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement