கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க மகளிர் அணி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஹரியானா எம்.பி சுனிதா துக்கல் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வுக்கு பின்னர் எம்.பி சுனிதா துக்கல் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சுனிதா துக்கல், உலகிலேயே பெரிய கட்சி பா.ஜ.க. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மகளிர் அணியை உத்வேகபடுத்த இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பா.ஜ.க அனைவரையும் ஒருங்கிணைக்கும் கட்சி. பிற கட்சிகள் மக்களை பிளவுபடுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கட்சியின் அனைத்து அணிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக கொண்டு இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையில் மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மகளிர் அணி செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மகளிர் அணி மாநாடு நடைபெறுகின்றது. அதிலும் நாங்கள் கலந்து கொள்கின்றோம். இதேபோன்று மாவட்ட வாரியாகவோ தனித்தனியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில், மாநில அளவில் மகளிர் மாநாடுகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதிகமான மகளிர் பா.ஜ.கவிற்கு வாக்களிப்பதை உறுதி செய்து பணியாற்றுகின்றனர். கட்சி மகளிர் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. மகளிர் வேட்பாளர்களை உருவாக்குவதிலும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
த.மா.க தலைவர் ஜி கே வாசன் பாஜக கூட்டணியில் அதிமுகவை இணைக்க தூது சென்றாரா என்ற கேள்விக்கு, “த.மா.க தலைவர் வாசன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்றார். அவர் இன்னொரு தலைவரை அவர் போய் பார்த்து இருப்பது, யார் யாருக்கு தூது? பா.ஜ.க.விற்கு தூது அனுப்புறாங்க என்றால், அது கட்சி தலைமைக்கு தான் தெரியும், எனக்கு தெரியாது” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் கட்சி துவங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். மக்கள் பணி செய்ய களத்துக்கு வருகின்றார், வரட்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அவர் வலியுறுத்தி இருக்கின்றார். பா.ஜ.க பணி செய்வதே மக்களுக்குத் தான். கட்சி தலைமை வேட்பாளர்களை முடிவு செய்யும். தமிழகத்திற்கு பிரதமர் வருகை தேதி முடிவு செய்யவில்லை. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. மோடியை பிரதமராக ஏற்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணியில் இணைய அழைக்கின்றோம். மீண்டும் மோடி தான் என்ற சூழல் உருவாகி இருக்கின்றது. ஊழலுக்கு எதிரான ஓரே கட்சி பா.ஜ.க. தான்” எனத் தெரிவித்தார்.