கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவராக வானதி சீனிவாசன் பதவி வகித்து வருகிறார். மேலும் கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக அவர் பதவி வகித்து வருகிறார். கோவையை சேர்ந்த இவர் கோவை மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநில தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வானதி சீனிவாசன் ஹைதராபாத் சென்றார். அங்கு பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். பின்னர் கோவை திரும்பிய வானதி சீனிவாசன், கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென வானதி சீனிவாசனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து வானதி சீனிவாசன், கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் வானதி சீனிவாசனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வானதி சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் சீராக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவனையில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வானதி சீனிவாசன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் விரைவில் குணமடைய வேண்டுமென பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வானதி சீனிவாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா தொற்று காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.