கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாகி உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை சேர்ந்த அமுல் கந்தசாமி அதிமுகவின், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். அதேபோன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து வந்தது.

இந்தநிலையில் அமுல் கந்தசாமி ஜூன் 21 ஆம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அப்பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமுல் கந்தசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரது உயிரிழப்பு தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், இரங்கல்களை தெரிவித்து இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்

வால்பாறையில் இடைத்தேர்தல் நடக்குமா ?

பொதுவாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, ராஜினாமா செய்தாலோ, அல்லது உயிரிழந்தாலோ அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 2021 தேர்தலுக்குப் பிறகு, ஈரோடு கிழக்கு மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக ஒரு தொகுதியில் எம்எல்ஏ அல்லது எம்பி.., பதவி காலியானால் 6 மாதங்களுக்குள் இடை தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாக உள்ளது. 

ஆனால் தற்போதைய திமுக அரசின் பதவி காலம், 2026 ஏப்ரலுடன் முடிவடைகிறது. இதனால் 2026 ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டிற்கு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. பொது தேர்தலுக்கு ஓராண்டு கூட இல்லாத நிலையில், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை எனத் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.