கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு தினங்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளையும் கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.


கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி, பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அடிக்கடி சாரல் மழை பெய்தது. வடவள்ளி, மருதமலை, ஆர்.எஸ்.புரம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. 




இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பொள்ளாச்சி அருகேயுள்ள கவியருவியில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். 


கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சின்னக்கல்லார், சோலையார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சின்னக்கல்லாரில் 17 செ.மீ மழையும், வால்பாறை பிஏபியில் 7.7 செ.மீ மழையும், வால்பாறை தாலுக்காவில் 7.5 செ.மீ. மழையும், சோலையாறில் 7.2 செ.மீ மழையும் பெய்துள்ளது. இன்றும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிக் கூடங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண