TN Covai Madurai Metro Rail: கோவை மற்றும் மதுரைக்கு விரிவான போக்குவரத்து திட்டமே போதுமானது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Continues below advertisement

தமிழக அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு:

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நிராகரித்துள்ளது. 2017ம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கோவை மற்றும் மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரையில், போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர மெட்ரோ ரயில் திட்டம் உகந்ததாக இருக்கும் என்பது மக்களின் கருத்தாகும்.

Continues below advertisement

மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மெட்ரோ ரயில் கொள்கையின் கீழ், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மட்டுமே பெருமளவிலான மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கு தகுதியானவை என கருதப்படுகிறது. ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூரில் சுமார் 15.84 லட்சம் மக்களும், மதுரையில் சுமார் 15 லட்சம் பேரும் மட்டுமே இருந்தனர் என கூறி, அந்த நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசின் பரிந்துரைகள் என்ன?

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயிலுக்குப் பதிலாக மாற்றுப் போக்குவரத்து முறைகளை ஆராய வேண்டும் என்ற ஆலோசனையுடன் திட்டங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ”மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை என்பதையும், நீண்டகால நிலைத்தன்மைக்கு கவனமாக திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு, செலவு குறைந்த பிற நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள் - வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS - மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைகள் இத்துடன் திருப்பி அனுப்பப்படுகின்றன”என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

வெடிக்கும் குற்றச்சாட்டுகள்...

அதேநேரம், 20 லட்சம் மக்கள் தொகை இல்லாத பல நகரங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதாரணமாக  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 லட்சம் பேரை மட்டுமே கொண்ட ஆக்ராவிற்கு 2019 ஆம் ஆண்டில் மெட்ரோ திட்டம் அனுமதிக்கப்பட்டது. அதேபோல், போபாலின் மக்கள் தொகை 19.17 லட்சம் ஆக மட்டுமே இருந்த நிலையில் அங்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு அனுமதித்தது. ஆனால், எதிர்க்கட்சியான திமுக ஆட்சி நடைபெறுவதால் தமிழ்நாட்டிற்கு மெட்ரோ ரயில் திட்டங்களை ஒதுக்க மத்திய அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

15 ஆண்டு கால காத்திருப்பு..

2010 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயிலுக்கு ஏற்ற நகரங்களில் ஒன்றாக கோயம்புத்தூரை மத்திய அரசு அடையாளம் கண்டது. தொடர்ந்து , கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் மாநில அரசு சமர்ப்பித்தது. அதன் பிறகு விரிவான இயக்கத் திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கையை டிசம்பர் 2024 இல் சமர்ப்பிக்கப்பட்டது. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெளியாகியுள்ள மத்திய அரசின் அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

கோவை மக்கள் அதிருப்தி...

2011 க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது யார் தவறு? கோயம்புத்தூர் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை மட்டுமே 30 லட்சத்தை கடந்துள்ளதாகவும், மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 40 லட்சத்தை கடந்து இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கோயம்புத்தூரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களான ஜெய்ப்பூர், கொச்சி மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. ஆனால், கோவை மட்டும் தற்போது வஞ்சிக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மக்கள் தொகையில் மட்டுமின்றி, ஐடி மற்றும் உற்பத்தி என பலதரப்பட்ட தொழில்துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்பது காலத்தின் கட்டாயம் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.