திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கெளசல்யா. இவர் கல்லூரியில் படிக்கும் போது சக மாணவரான உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பட்டியலின இளைஞரை, காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு மாற்று சமுகத்தை சேர்ந்த கெளசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே கூலிப்படையால் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் கூலிப்படையின்  தாக்குதலில் படுகாயமடைந்த கெளசல்யா அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார். பின்னர் மன வேதனையால் தற்கொலை முயற்சி செய்த கெளசல்யா அதில் இருந்தும், பிழைத்து வந்தார். பட்டப்பகலில் கூலிப்படையால் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




மறுமண சர்ச்சைகள்


இதையடுத்து கெளசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ மையத்தில் மத்திய அரசு பணியில் சேர்ந்தார். மேலும் சாதிய ஆவணப் படுகொலைகளுக்கு எதிராக தொடர்ந்து கெளசல்யா குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் தேதி கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பறை இசைக் கலைஞரான சக்தி என்கிற சத்தியநாராயணன் என்பவரை கெளசல்யா காதலித்து, மறுமணம் செய்து கொண்டார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, எவிடன்ஸ் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




தமிழ்நாடே திரும்பிப் பார்த்த திருமணம்


கெளசல்யா விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் கவனம் பெற்ற ஒன்று. அதனால் கெளசல்யாவின் மறுமணமும் அதே அளவிற்கு கவனம் பெற்றது. பறை அடித்தபடி மணமக்கள் உற்சாகமாக தங்கள் திருமணத்தை கொண்டாட, தமிழ்நாடே அதை மகிழ்ச்சியோடு பார்த்து மகிழ்ந்தது. அதே நேரத்தில் ஒரு தரப்பு, அதை விமர்சிக்கவும் செய்தது. அதையெல்லாம் பொருள்படுத்தாமல் கட்டாயம் கெளசி-சக்தி திருமண வாழ்க்கை அமையும் அன பெரியாரிய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.




புகாரில் சிக்கிய சக்தி


இந்த திருமணத்திற்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் ஆதரவாக கருத்து பதிவிட்ட நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதேசமயம் இந்த திருமணம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. சங்கர் படுகொலை நடந்த பின்னர் குறுகிய காலத்திலேயே மறுமணம் செய்ததற்கு ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தனர். அதேபோல சக்தியின் மீது சில பாலியல் புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக கொளத்தூர் மணி, தியாகு ஆகியோர் விசாரித்து ஒரு பெண் கருக்கலைப்பு செய்த விவகாரத்தில், 3 இலட்ச ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டுமென அறிக்கை வெளியிட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் அப்பணத்தை பெற மறுத்து விட்டார். இதனால் மீண்டும் சமூக வலைதளங்களில் இருவரது திருமணம் மீண்டும் விவாதப் பொருளானது. இருப்பினும் விமர்சனங்களை பற்றிக் கவலைப்படாத கெளசல்யா உடன் வாழ்ந்து வந்தார். இருவரும் குன்னூரில் வசித்து வந்தனர்.


 




சில நாட்களில் விரிசல்


சக்தி மீதான புகார்கள் எழுந்த போது கூட அதை பொருட்படுத்தாமல் அவருடன் வாழ சம்மதித்த கெளசல்யா, அதன் பின் சில நாட்களில் சக்தி மீது அதிருப்தி கொண்டார். அப்போதே சக்தியை பிரிந்து செல்லவும் அவர் முடிவு செய்தார். ஆனால் அவரின் முடிவை சிலர் தலையிட்டு, மாற்றினர் என அப்போது பரவலாக பேசப்பட்டது .அது மட்டுமின்றி இருவரையும் சமரசமும் செய்து வைத்தனர். ஆனாலும் சக்தியின் நடவடிக்கைகள் கெளசல்யாவிற்கு அடுத்தடுத்து மனவருத்தத்தை தந்ததால் தான் இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளார் என தெரிகிறது. இந்த முறை அந்த முடிவு தொடருமா... அல்லது மீண்டும் சமரசம் செய்து வைக்கப்படுவாரா கெளசல்யா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.