திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கெளசல்யா. இவர் கல்லூரியில் படிக்கும் போது சக மாணவரான உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பட்டியலின இளைஞரை, காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு மாற்று சமுகத்தை சேர்ந்த கெளசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே கூலிப்படையால் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் கூலிப்படையின்  தாக்குதலில் படுகாயமடைந்த கெளசல்யா அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார். பின்னர் மன வேதனையால் தற்கொலை முயற்சி செய்த கெளசல்யா அதில் இருந்தும், பிழைத்து வந்தார். பட்டப்பகலில் கூலிப்படையால் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




இந்த கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதன் மீதான மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கெளசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. மீதமுள்ள 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


இதனிடையே கெளசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ மையத்தில் மத்திய அரசு பணியில் சேர்ந்தார். மேலும் சாதிய ஆவணப் படுகொலைகளுக்கு எதிராக தொடர்ந்து கெளசல்யா குரல் கொடுத்து வருகிறார். சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்தும் வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டில் கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பறை இசைக் கலைஞரான சக்தி என்கிற சத்தியநாராயணன் என்பவரை கெளசல்யா காதலித்து, மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இருப்பினும் விமர்சனங்களை பற்றிக் கவலைப்படாத கெளசல்யா உடன் வாழ்ந்து வந்தார். இருவரும் குன்னூரில் வசித்து வந்தனர்.




இந்நிலையில் கெளசல்யா சக்தியை பிரிவதாக தனது முகநூல் பக்கத்தில் கெளசல்யா பதிவிட்டுள்ளார். அதில், “நானும் சக்தியும் பிரிகிறோம். ஓராண்டாக மனதளவில் என்னை காயப்படுத்தியதால் இனி அவரோடு என்னால் வாழ இயலாது. விவகாரத்திற்கு திங்கள் கிழமை விண்ணப்பிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


கெளசல்யா – சக்தி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சக்தி குடும்பத்தினர் உடன் கெளசல்யாவிற்கு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், சமாதானப்படுத்த முயன்ற சக்தியின் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கெளசல்யா சக்தியை பிரிவதாகவும், விவகாரத்திற்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் கெளசல்யா அறிவித்தார். கெளசல்யாவின் இந்த பதிவிற்கு இருதரப்பினர் கலவை விமர்சனங்களை கமெண்ட் செய்ய துவங்கினர். ஒரு தரப்பினர் அவசரம் வேண்டாம் என கெளசல்யாவுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்த நேரத்தில், மற்றொரு தரப்பினர் கெளசல்யாவின் முடிவை கிண்டல் செய்யத்துவங்கினர். இது இப்படி தான் நடக்கும் என்பதை போல அடுத்தடுத்து கமெண்ட்டுகள் கெளசல்யாவில் பதிவில் வரத்துவங்கின. போதாக்குறைக்கு கவுசல்யாவின் பதிவில் எழுத்துப்பிழை வேறு இருந்ததால், அதை வைத்தும் ட்ரோல் செய்யத்தொடங்கினர். இதைத் தொடர்ந்து உடனடியாக தனது பதிவை நீக்கினார் கெளசல்யா. பதிவை மட்டும் நீக்கினாரா, அல்லது முடிவிலிருந்து பின்வாங்கினாரா என்பது இனிமேல் தான் தெரியவரும்.