நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என உண்மையாக போராடி வருவதாகவும், தற்போது வரை 27 லட்சம் நீட் விலக்கு கையெழுத்து பெற்றுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் நடைபெற்ற இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.


நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்:


ஈரோடு மாவட்டம் சரளையில் திமுக மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் மாநாட்டு நிதி மற்றும் தேர்தல் நிதிகளை வழங்கினர். பின்னர் இளைஞரணியினர் முன்னிலையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது போராடினோம். தற்போது வரை உண்மையாக போராடி வருகின்றோம்.


நீட் பிரச்சனை உதயநிதியின் பிரச்சினை இல்லை. மாணவர்களின் பிரச்சினை என்றவர், கலைஞர் தான் நுழைவு தேர்வை ரத்து செய்தார் என்றார். இன்றைய காலத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் வைத்து லட்ச லட்சமாக சம்பாதித்து வருகின்றனர். இதுவரை நீட் தேர்வால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து முதல்வரிடம் வழங்கி மத்திய அரசிடம் வழங்கப்படும் என்றார்.


கையெழுத்து இயக்கம்:


இதுவரை இணையதளம் வழியாக 16 லட்சமும் போஸ்ட் கார்ட் மூலம் 11லட்சம் நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்றுள்ளோம் என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி நீங்களும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதால் கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெறுங்கள் என்றேன். அதற்கு திமுக நடத்தும் நாடகம் என்றார். உடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா காலை வாரியது எடப்பாடி பழனிச்சாமி தான் நாடகக்காரர் என்றார்.


மோடிக்கு முதல்வர் மற்றும் எனது நினைப்பு தான் என்பதால், ராஜஸ்தானில் என்னைப்பற்றி பேசியுள்ளார். நான் சமூக நீதி பற்றி பேசினேன். ஆனால் பேசாததை பேசியதாக ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தெரியும் படி செய்துள்ளனர்‌ என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகம் கலைஞரின் குடும்பம் தான். தமிழகத்தில் உள்ள அனைவரும் கொள்கை வாரிசு தான் என்றார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை மாற்றுவேன் என்று சொன்னவர் இந்தியாவின் பெயரை மாற்றியதற்கு பாராட்ட வேண்டும்.


மருத்துவ காப்பீட்டில் ஊழல்:


ரமணா படம் போல ஒன்றிய அரசு நிஜத்தில் 88 ஆயிரம் இறந்தவருக்கு மருத்து காப்பீடு செய்து ஊழலில் ஈடுபட்டுள்ளது என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சுத்தியல் பூட்டை தலையில் அடித்து திறக்க முயற்சித்தும் முடியாமல் சாவி சுலபமாக திறந்தது. இதற்கு சுத்தியிடம் சாவி சொல்லியது பூட்டின் இதயத்தை தொட்டேன் என்றது. இதனை இன்றைய அரசியல் சூழலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சாவி திராவிட அரசு, பூட்டு தமிழ்நாடு, சுத்தியலாக ஒன்றிய அரசு உள்ளது‌ என சிறு கதையை கூறினார்.