கோவை புலியகுளம் சாலையில் உள்ள கிரீன் பீல்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 63 வயதான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளைய மகளுக்கு திருமணம் ஆகாத நிலையில், தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிங்காநல்லூர் கிருஷ்ணா காலனியை சேர்ந்த வர்ஷினி என்பவருடன் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. வர்ஷினி அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 21 ம் தேதியன்று ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக பேசுவதற்காக அருண் என்பவரை வர்ஷினி, ராஜேஸ்வரி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மயக்க மருந்து கலந்த உணவு அருந்தியதும் ராஜேஸ்வரி உறங்கி விட்டார்.
அன்றிரவு 12.30 மணியளவில் ராஜேஸ்வரிக்கு முழிப்பு ஏற்பட்டு அரை தூக்கத்தில் கண் விழித்து பார்த்தபோது, அவரது படுக்கை அறையிலிருந்து வர்ஷினியும், அருணும் வந்துள்ளனர். அதுகுறித்து கேட்ட போது, ரெஸ்ட் ரூம் செல்ல போனேன் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் வர்ஷினி, அருண் மற்றும் கார் ஓட்டுநர் நவீன்குமார் ஆகிய மூவர் காரில் அவரது வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளனர். பின்னர் அவரது படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, படுக்கைக்கு அருகில் இருந்து பிளாஸ்டிக் ஸ்டூல் அவர் வைத்த இடத்தில் இல்லாமல் கப்போர்டுக்கு அருகில் இருந்துள்ளது. கப்போர்டுக்கு மேல் கட்டைப்பையில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் கீழே கிடந்துள்ளது.
இதனைப்பார்த்து ராஜேஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கப்போர்டை திறந்து பார்த்த போது, 100 சவரண் தங்க நகைகள் மற்றும் வைர வளையல்கள் காணாமல் போயிருந்தது. மேலும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த இரண்டரை கோடி பணமும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வர்ஷினிக்கு போன் செய்ய செல்போனை தேடியபோது, செல்போனும் காணவில்லை என்பது தெரிந்தது. இது குறித்து லேண்ட் லைன் போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் வர்ஷினிக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு, நகைகள் மற்றும் பணம் திருடு போன விபரத்தை சொன்ன போது தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் பழனி முருகன் கோயிலுக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரி 100 சவரண் தங்க நகை, 2 1/2 கோடி ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்டு இருப்பது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் இவ்வழக்கில் குற்றவாளியான ஜெசிந்தா மேரி, அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 7 லட்ச ரூபாய் மற்றும் 31 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். அதில் அருண்குமார் திருடி சென்ற 31 இலட்ச ரூபாய் சேலம் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 70 சவரண் தங்கநகைகள், 40 இலட்ச ரூபாய், கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வர்ஷினி மீது பொள்ளாச்சி, தாராபுரம், சிங்காநல்லூர், கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்குகள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதுவரை இவ்வழக்கில் 100 சவரண் தங்கநகைகள், 48 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.