சந்தன கடத்தல் வீரப்பன் பல ஆண்டுகளாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய 4 மாநில போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். பின்னர் தமிழக அதிரப்படை காவல் துறையினர் சந்தனகடத்தல் வீரப்பனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதனிடையே கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட மூன்று பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இதில் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் மற்றும் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். 3 பேரும் கோவை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். பல ஆண்டுகளாக கோவை சிறையில் இருந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் காவல் துறையினர் அடைத்தனர். இந்த நிலையில் மாதையனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து கடந்த மாதம் சிறை காவல் துறையினர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகியோர் கோவை மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இருவரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் நேற்று கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.




இது குறித்து மக்கள் சிவில் உரிமை கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ச.பாலமுருகன் கூறுகையில், “கடந்த 1989 ம் ஆண்டு சந்தனமரம் கடத்திய வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் கர்நாடக மாநில காவல் துறையினர் கைது செய்தனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வருவதற்கு ஒருநாள் முன்னதாக, வனச்சரகர் சிதம்பரநாதன் கொலை வழக்கில் தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர்களுக்கு, உயர் நீதிமன்ற மேல் முறையீட்டிலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.


32 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினை மதுரையில் மனித உரிமை ஆர்வலர்கள் சந்தித்து இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினோம். நேற்று இருவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.


இதேபோல 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக எந்த வழக்கிலும் யாரையும் சிறையில் வைத்திருக்க கூடாது என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். எஞ்சிய காலத்தை திருந்தி குடும்பத்துடன் அவர்கள் செலவழிக்கும் வகையில் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண