ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டாற்று வெள்ளத்தால் அமரர் ஊர்தி செல்ல முடியாத நிலையில், காட்டாற்று வெள்ளத்தை கடந்து 3 கி.மீ தூரம் சடலத்தை சுமந்து சென்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும் விட்டு விட்டு பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கோவை குற்றாலம், கவியருவி ஆகிய அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அருகியம் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்துமாரி. 55 வயதான விவசாயியான இவர், கடந்த வாரம் உடல் நிலை பாதிப்பு காரணமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 7 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சித்துமாரியின் உறவினர்கள் தமிழக அரசு இலவச அமரர் ஊர்தியில் மூலம் சொந்த ஊருக்கு உடலை கொண்டு வந்தனர்.
சொந்த ஊர் திரும்பும் வழியில் கடம்பூர் அடுத்த குரும்பூர் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அமரர் ஊர்தி, செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமரர் ஊர்தி ஓட்டுநர் சடலத்தை குரும்பூர் பாலத்தில் இறக்கி விட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த கிராம மக்கள் உயிரிழந்த சித்துமாரியின் உடலை மூங்கிலில் வைத்து சடலத்தை சுமந்தபடி காட்டாற்றை கடந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக 3 கி.மீ தூரம் சடலத்தை சுமந்து சென்று குரும்பூரில் சித்துமாரியின் உடலை நல்ல அடக்கம் செய்தனர்.
உயர் மட்ட பாலம் இல்லாத நிலையில் காட்டாற்றில் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் மழைக்காலங்களில் அவசர தேவைகளுக்காக கூட காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணனிடம் கேட்ட போது, ”8 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணி விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்