கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த நித்யா மனோகரன் என்பவர் நகராட்சித் தலைவராக இருந்து வருகிறார். நகராட்சி ஆணையராக முத்துசாமி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பயனாளி ஒருவர் மின் இணைப்பு பெறுவதற்காக படிவம் 7-ல் கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் கையெழுத்து வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை அணுகியுள்ளார். அதற்கு, மின் இணைப்புப் பெற ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் கையெழுத்து இட்ட படிவம் கொடுக்கப்பட மாட்டாது என நகராட்சி ஆணையர் தரப்பில் பதில் தரப்பட்டது.
இதற்கு அந்த நபர், கருமத்தம்பட்டி நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் நகராட்சி ஆணையரின் முத்திரை மற்றும் கையெழுத்துடன் படிவம் 7 ஐ பயன்படுத்தி மின் இணைப்பு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 7 மாதங்களாக படிவங்களில், தான் கையெழுத்து எதுவும் போடாத நிலையில், எப்படி மின் இணைப்பு பெற்றார்கள் என நகராட்சி ஆணையருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து, தனது கையெழுத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி யாரேனும் மின் இணைப்பு பெற்றிருக்கிறார்களா? என தெரிந்து கொள்ள நகராட்சி ஆணையர் எலச்சிபாளையம் மின் வாரிய அலுவலகத்தை அணுகினார்.
அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சோமனூர் செந்தில் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் தங்கராஜன், கருமத்தம்பட்டி நகராட்சியின் அனுமதியின்றி பிருந்தாவன் நகரில் கட்டப்பட்ட10 வீடுகளுக்கு நகராட்சி அலுவலக முத்திரையுடன் ஆணையரின் கையெழுத்திடப்பட்ட போலி படிவங்கள் மூலம் மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மின் இணைப்பு பெற்றது தொடர்பாக நகராட்சி ஆணையர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கருமத்தம்பட்டி நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சக்திவேல் என்பவர், நகராட்சி ஆணையரின் முத்திரை மற்றும் போலி கையெழுத்தை பயன்படுத்தி படிவம் 7 ஐ தயாரித்து சட்ட விரோதமாக மின் இணைப்பு பெற உதவியது தெரியவந்தது. இதனையடுத்து போலி படிவம் மூலம் மின் இணைப்பு பெற்ற தங்கராஜன் மற்றும் அதற்கு உதவிய சக்திவேல் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்