செல்போனில் வாக்குவாதம் மற்றும் ஆபாசமாக பேசிய சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க, திருப்பூர் பா.ஜ.க அலுவலகத்தில் விசாரணை கமிட்டி முன்பு திருச்சி சூர்யா, டெய்ஸி ஆகியோர் ஆஜராகினர்.


‘தி.மு.க.வில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ஜ.க. வில் இணைந்தவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. பா.ஜ.க. ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். பா.ஜ.க.வுக்குச் சென்ற பிறகு தி.மு.க. தலைமையையும், தி.மு.க. வின் முக்கிய நபர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசிவருகிறார். இதற்கிடையே பேருந்து கடத்தல் வழக்கு, பள்ளி அபகரிப்பு வழக்கு என அவரைச் சுற்றித் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்ஸி சரணை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசியும், அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா சிவா பேசியிருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.




பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் டெய்ஸி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில் பேசினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த செல்போன் உரையாடலில் பேசும் சூர்யா சிவா, ”மாவட்டப் பொறுப்புல மைனாரிட்டிய போட முடியாமயே இவ்ளோ தாண்டுறியே. 68 சதவிகித ஓபிசி.யை வெச்சுக்கிட்டு. நாளைக்கு நான் என் சாதிகாரனை ஏவிவிடுறேன். நீ ஊர் தாண்ட முடியாது. உன் வீடு புகுந்து எல்லாத்தையும் வெட்டிப்புடுவேன்” எனத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா, தொடர்ந்து பேசுகையில். ``நீ அண்ணாமலைகிட்ட போய்க்க. ஜே.பி.நட்டா, அமித் ஷா, மோடின்னு யார்கிட்ட வேணும்னாலும் போய்க்கோ. ஆனானப்பட்ட தி.மு.க. வுலயே ரெளடியிசம் பண்ணிட்டு வந்தவன் நான்” எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார்.  


இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் கனக சபாபதியிடம் தெரிவிக்கப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை திருச்சி சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.




இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பா.ஜனதா மாநில துணைத் தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்ஸி மற்றும் திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணை கமிட்டியினர் தெரிவித்தனர். மேலும், இது உட்கட்சி தொடர்பானது என்பதால் பத்திரிகை மற்றும் வெளி நபர்கள் அனுமதிக்கப்படவில்லை.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண