தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் நேற்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லாறு பகுதியில் 9.5 செ.மீ. மழை பதிவானது. சோலையார் பகுதியில் 5.9 செ.மீ. மழையும், வால்பாறை பிஏபியில் 5.6 செ.மீ. மழையும், வால்பாறை தாலுக்காவில் 5.2 செ.மீ. மழையும், சின்கோனாவில் 5 செ.மீ. மழையும் பதிவானது. இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நொய்யல் ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை முதல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடி வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கான்கீரிட் சாலையாக மாற்றப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக அச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல வெள்ளலூர் - நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தரைப்பாலம் நொய்யல் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனிடையே தரைப்பாலத்திற்கு மேலே வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பாலத்தை கடந்து செல்கின்றனர். அதேசமயம் தரைப்பாலத்தை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மாற்றுப் பாதையான ஓண்டிபுதூர்- பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.