நவம்பர் மாதம் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதியன்று நள்ளிரவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் பாதையில் கனமழை பெய்தது. உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் பாதையில், மழை காலங்களில் மண் சரிவுகளால் தடைபட்டு வருவது வழக்கம். கடந்த 3 ம் தேதி பெய்த கனமழை காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாள பாதை புதைந்து போனதோடு மரங்களும் சாய்ந்தன.
இதனால் கடந்த 4-ஆம் தேதி காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு சுற்றுலா பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணிக்காக இருபதிற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, இருப்பு பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இருப்பு பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் சீர் செய்யப்பட்டு மலை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் மழை காரணமாக சீரமைப்பு பணிகள் தாமதமாகின. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழுமையடையாத காரணத்தினால் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான இரண்டு மலை ரயில்கள் சேவை நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மலை ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு பெற்றவர்களுக்கு பயணக்கட்டணம் முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் எனவும், ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதே சமயம் உதகை - குன்னூர் இடையே வழக்கம் போல மலை ரயில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.