கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய வனம் மற்றும் வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு தெற்கு மண்டலம் மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு கோவை மண்டல குழுவினருக்கு மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் யானை தந்தங்கள் விற்பனை நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனப் பணியாளர்கள் கடந்த 3 ஆம் தேதி பகல் சுமார் 12.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மறைந்திருந்து கண்காணித்தனர்.


அப்போது தனியார் பூங்கா அருகே பிரதீஸ் மற்றும் சின்ன பாண்டி என்பவர்கள் யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக சுப்பிரமணி என்பவரிடம் கட்டை பையில் மறைத்து வைத்திருந்த முறிந்த நிலையில் இருந்த யானை தந்தத்தை காட்டியுள்ளனர். அப்போது  வனப்பணியாளர்கள் சுற்றி வளைத்து கையும் களவுமாக 3 பேரையும் பிடித்தனர். வனத்துறையினர் பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போது பிரதீஷ், குணசேகரன், மற்றும் சின்ன பாண்டி ஆகியோர் தனியார் பூங்கா அருகே வந்து சுப்பிரமணியிடம் தங்கத்தை விற்பதற்காக விலை பேசி உள்ளதும், பிரதிஷ் என்பவர் ராஜ்குமார் என்பவரிடமிருந்து தந்தத்தை வாங்கியுள்ளதும், ராஜ்குமாருக்கு நஞ்சுண்டன் என்பவர் தந்தத்தை கொடுத்துள்ளதும் தெரியவந்தது.


இதனைத்தொடர்ந்து ராஜ்குமார், குணசேகரன், மனோஜ் மற்றும் நஞ்சுண்டன் ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் வனத்துறையினர் நஞ்சுண்டன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விளாமுண்டி வனச்சரகத்தில் பணி புரியும் வேட்டை தடுப்பு காவலரான மணிகண்டன் என்பவர் யானை தந்தத்தை கொடுத்துள்ளது தெரியவந்தது. இதன்பேரில் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்ட போது 2017 ஆம் ஆண்டு தாம்புக் கரை காப்புக்காடு, தாம்புக்கரை பள்ளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது வனப்பகுதியில் கிடந்த யானை தந்தத்தை எடுத்து மறைத்து வைத்ததும், நஞ்சுண்டன் யானை தந்தம் கேட்டதால் யானை தந்தத்தை எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது.


பின்னர் நஞ்சுண்டன் தன்னிடமிருந்த யானை தந்தத்தை ராஜ்குமார் மூலம் பிரதீஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். இது குறித்து வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கோத்தகிரியைச் சேர்ந்த பிரதிஷ் (27), சோலூர் மட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (26), ராஜ்குமார் (41), அரக்கோடு கரிக்கையூரைச் சேர்ந்த நஞ்சுண்டன் (36), பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் (27), சிறுமுகையைச் சேர்ந்த சின்ன பாண்டி (45), கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (43), சோலூர் மட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (23) ஆகிய 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு கொண்டு வந்த யானை தந்தம், மரக்கட்டையாலான போலியான யானை தந்தம் மற்றும் கார் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வனத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.