மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கன மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டம் சாடிவயல் அருகே அமைந்துள்ள கோவை குற்றாலம் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. போளுவாம்பட்டி வன பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குளித்து மகிழ, கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்து கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என ஆச்சரியமான அனுபவங்களை கோவை குற்றாலம் தரக்கூடும். கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடம். கோவை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளதாலும், மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை இரசித்து அருவிகளில் குளித்து மகிழவும், அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடமாகவும் இது உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக உள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.


கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. அதேசமயம் அவ்வப்போது கன மழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், மழை குறைந்த பின்னர் மீண்டும் திறக்கப்படுவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல போளுவாம்பட்டி வனத்துறையினர் தடை விதித்தனர்.


மழை குறைந்ததை அடுத்து இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். ஆனால் நேற்றிரவு மேற்கு தொடர்ச்சி மலையில் மழை அதிகமாக பெய்துள்ளதால், கோவை குற்றாலத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்த படி உள்ளது. இதன் காரணமாக அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலத்திற்கு பாதுகாப்பு கருதி மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை குற்றாலத்திற்கு தொடர்ச்சியாக மழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.


மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (11) – ஆர்ப்பரித்துக் கொட்டும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி பயண அனுபவம்..!