‘மச்சி ஒரு டிரிப் போலமா?’ பயணத் தொடரில் வாரந்தோறும் மலைகள், காடுகள், கடல் என ஊர் சுற்றிய அனுபவங்கள் மூலம், ஊர் சுற்றுவதற்கான ஒரு ஆர்வத்தையும், வழிகாட்டுதல்களையும் தந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஒரு குளியலுக்கான பயணம் செல்லலாம் எனத் தோன்றியது. ஓடும் ஆற்று நீரில் குளிப்பதை விட, கொட்டும் அருவிகளில் குளிப்பது பேரானத்தையும், புத்துணர்வையும் தரும். எனவேதான் பலரும் குற்றாலத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அங்கிருந்து வெகு தொலைவில் உள்ள கோவைவாசிகளின் கவலைகளை தீர்த்து வைக்கிறது, கோவை குற்றாலம். கோவையில் ஒரு குற்றாலம், கோவை குற்றாலம்.




அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என ஆச்சரியமான அனுபவங்களை கோவை குற்றாலம் தரக்கூடும். ஒரு நாள் முழுக்க காட்டிற்குள் சென்று வந்த அனுபவத்தோடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடம் இது. கோவை மாவட்டத்தில் குடும்பத்தினர் உடன் அருவியில் குளிக்க வேண்டுமென்றால், கோவை குற்றாலமோ அல்லது கவி அருவி என பெயர் மாற்றப்பட்ட குரங்கு அருவிக்கோ தான் செல்ல வேண்டும். வைதேகி நீர் வீழ்ச்சியோ வன விலங்குகள் நடமாட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கோவைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரே நீர்வீழ்ச்சி கோவை குற்றாலம்தான்.




மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ – இயற்கை அதிசயங்கள் காணும் கூர்க் பயணம்..!


'மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’ பரளிக்காடு வாங்க..!


மனதை கொள்ளை கொள்ளும் கோவை குற்றாலம்!


கோவை நகருக்கு மேற்கே இயற்கை ஏழில் கொஞ்சும் சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இந்த நீர் வீழ்ச்சிக்கு மேல் பகுதியில் கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை உள்ளது. அதையும் பார்த்து விட்டு வந்து விடலாம் என கிளம்பி விட முடியாது. அடர் வனத்திற்குள் அமைந்துள்ள தமிழ்நாடு சாலையில் அணைக்கு தடை போடப்பட்டுள்ளது. கோவை புறநகர் பகுதிகளில் பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், நகரத்தை ஒட்டிய பகுதிகளில் குறைந்த அளவிலான பொழுதுபோக்கு தலங்களே உள்ளன. கோவை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசிக்க, அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடம் இது. சூழல் சுற்றுலா தலமாக இவ்விடம் உள்ளது. கிடைக்கும் வருமானம் பழங்குடிகளுக்கு செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.




கோவை நகரில் இருந்து மேற்குப் பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். பசுமை போர்த்திய விளை நிலங்கள் வழியாக செல்லும் சாலையில் செல்வதே அழகான அனுபவமாக இருக்கும். விளை நிலங்களையும், சிற்றுர்களையும் கடந்தால், சலசலத்து தண்ணீர் ஓடும் ஓடை கோவை குற்றாலம் வந்து விட்டதை காட்டும். வாகனங்கள் அதற்கு மேல் அனுமதி இல்லை. வனத் துறை வாகனங்களில் தான் செல்ல வேண்டும். வனத்துறை சோதனைச் சாவடியில் நுழைவுக்கட்டணம், கேமரா கட்டணம், வாகன கட்டணம் செலுத்தி விட்டு வந்து நின்றால், வனத்துறை வாகனம் வந்து நிற்கும். அதில் ஏறினால் காடுகளுக்குள் செல்லும் பாதையில் பேருந்து பயணம் தொடரும். சிறுவாணி அணைக்கு செல்லும் பாதையில் இருந்து இடது புறம் அருவிக்கு செல்லும் பாதை பிரியும். அங்கே இரு புறமும் உயர்ந்து வளர்ந்த தேக்கு மரக்காடுகள் சில்வண்டுகளின் ரீங்காரம் ஓலிக்க நம்மை வரவேற்கும்.




மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலமா?’ : மனதை கொள்ளை கொள்ளும் ‛கொள்ளேகால்’ பயண அனுபவம்!


'மச்சி ஒரு டிரிப் போலமா?' ( பகுதி - 6) - ஆலப்புழாவில், மிதக்கும் படகு வீட்டு பயணம்..!


நடை பயணமும், அருவி குளியலும்!


தேக்கு மரக்காடுகளின் இறுதியின் பேருந்து நின்று விடும். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காடுகளுக்குள் நடை பயணமாக செல்ல வேண்டும். பசுமை போர்த்திய வனம், முகத்தை வரும் குளிர் காற்று, பறவைகளின் கீச்சொலிகள், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் யானைச் சாணங்கள் என திரில் அனுபவமாக இருக்கும். வியர்க்க விறுவிறுக்க நடந்தால், கொட்டும் நீர் வீழ்ச்சி குளிக்க வரவேற்கும்.




மலைக்காடுகளில் இருந்து வானம் கொட்டுகிறது. மலைகளில் பல அடுக்குகள் தாண்டி நீர் அர்ப்பரித்து விழுகிறது. ஒவ்வொரு அடுக்குகளிலும் பலர் கூட்டம் கூட்டமாக குளித்துக் கொண்டிருப்பார்கள். எனக்கான இடம் தேடி நீர் வீழ்ச்சியில் தலை நனைத்தேன். உச்சந்தலையில் விழும் குளிர்ந்த நீரின் வேகத்தில், உடல் சிலிர்த்து அடங்கியது. மெல்ல உடல் குளிருக்கு பழகிப் போனது. நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து விழுந்த குளிர்ந்த தெளிந்த நீர் தேகம் நனைக்க, உடலும் மனமும் புத்துணர்வு அடைந்தது. தண்ணீரை குடித்து பார்த்தால், சிறுவாணியின் சுவை நாவில் தித்தித்தது. தண்ணீரில் குளித்து, ஆட்டம் போட்டால் நேரம் செல்வதே தெரியவில்லை.




விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிவது வழக்கம். உடை மாற்றும் அறைகள், நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிகமானால் எச்சரிக்கும் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடைமழை காலத்திலும், கொதிக்கும் கோடை காலத்திலும் நீர் வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்படும்.




கவரும் மர வீடுகள்


வெகு நேரத்திற்கு பின்னர் பிரிய மனமின்றி மேலே வந்தேன். உடல் ஈரம் உலர்ந்தாலும், மனதின் ஈரம் உலர்வதில்லை. ரம்மியமான இயற்கை சூழலில் பிரிய மனம் இல்லாதவர்களுக்கு, ஒரு நாள் தங்கிச்செல்லும் வாய்ப்பு உள்ளது. குளியலுக்கு பின் இரவு நேர ஓய்வுக்காக கோவை குற்றால நுழைவாயிலுக்கு அருகில் சுற்றுலா பயணிகளுக்காக தங்குமிடங்கள் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் மர வீடுகள் மனதை கவரும் வகையில் இருந்தன. வாய்ப்பிருந்தால் வன விலங்குகளும் காண கிடைக்கும். இங்கு தங்க வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். நாங்கள் முன்பதிவு செய்திருந்ததால் எந்த சிக்கலும் இருக்கவில்லை. வனச்சூழலில் இரவுப் பொழுது இனிமையாக இருந்தது. அடிக்கடி தூரத்தில் எங்கோ யானைகளின் பிளிறல் கேட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் பயம் இருந்தது. அதன் வாழிடத்தில் தான் தங்கியிருக்கிறோம் என்ற உணர்வு எழுந்தது. நண்பர்களுடன் பேசியபடி கண்ணயர்ந்தேன்.




விடிகாலையில் சேவல் கூவியதை கேட்டு எழுந்தவர்களை, யானையின் பிளிறல் எழுப்பி விட்டது.


(பயணங்கள் முடிவதில்லை)


மேலும் படிக்க : மச்சி ஒரு டிரிப் போலமா? Part-5: ஊட்டிக்கு இந்த ரூட்டில் போயிருக்கீங்களா? இது வேற லெவல் ட்ரிப்!


’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்


மச்சி ஒரு டிரிப் போலாமா?: தூவானம்... வனமே வானம்... 'சின்ன சிரபுஞ்சி' சின்னக்கல்லார் பயணம்!