அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என ஆச்சரியமான அனுபவங்களைக் கொண்டுள்ளது, கோவை குற்றாலம். ஒரு நாள் முழுக்க காட்டிற்குள் சென்று வந்த அனுபவத்தோடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது.

Continues below advertisement

கோவை நகரில் இருந்து மேற்குப் பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். இயற்கை ஏழில் கொஞ்சும் சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. கோவை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசிக்க, அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அருவிகளுக்கு செல்ல அனுமதி

Continues below advertisement

இதனிடையே தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் அர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் அருவிகளுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மழை குறைந்து இருப்பதால், கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ உகந்த சூழல் நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இன்று முதல் கோவை குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வாரத்தில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வருவதால், வார இறுதியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.