நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரெயில் சேவை வருகின்ற 25 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி எல்லை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்யும் போது, மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படுவதும், இதனால் நீலகிரி மலை ரயில் சேவை நிறுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, கடந்த 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும், மீண்டும் 9 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மலை ரெயில் பாதையில் சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த நிலையில், 10 நாட்களுக்குப் பின்னர் கடந்த 19ஆம் தேதி முதல் மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த திடீர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. அடர்லி, ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மேலும் மண் சரிந்து ரயில் பாதையை மூடியது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நேற்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக மலை ரெயிலில் பயணம் செய்ய வந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நிறைவடையாததால் வருகின்ற 25 ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான நீலகிரி மலை இரயில் சேவை இரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம் குன்னூர் - உதகை இடையிலான மலை ரயில் வழக்கம் போல இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கும் எனவும், ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.