1. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் அதிகரிக்கும் கொரொனா தொற்று பரவல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி, ஜித்தின் சாய் ஆகியோரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தக்கோரி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் மனு அளித்த அவர் இதனை தெரிவித்தார்.

  2. கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த விமல்ராஜ், திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற இரண்டே மாதங்களில் ஊழல் புகார்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  3. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. அதேசமயம் நீலகிரியில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

  4. கோவையில் பெரியார் குறித்து அவதூறாக சுவரொட்டி ஒட்டிய பாரத் சேனா அமைப்பை சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் ஆகிய இருவரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர். நேற்று பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் காந்திபுரம் நூறடி சாலை, டாடாபாத் பகுதிகளில் பெரியார் குறித்து அவதூறாக சுவரொட்டிகளை அவ்வமைப்பினர் ஒட்டியிருந்தனர்.

  5. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அம்பலமூலா பகுதியில் பசு மாட்டினை புலி அடித்துக் கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதகாவும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 மாடுகளை புலி அடித்துக் கொன்றுள்ளது என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

  6. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர் கவுண்டம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் சில பகுதிகளை நகராட்சியாக மாற்ற பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  7. கோவை மாவட்டத்தில் இரண்டாவது முறையாக நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 1 இலட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1500 தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  8. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள சேவூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த மாணவர்கள் பயிலும் வகுப்பறை, பள்ளி வளாகம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

  9. ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள தனியார் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

  10. திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் பிரகதீஸ் என்பவரை, தெருநாய்கள் கடித்துக் குதறின. படுகாயமடைந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.