கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்றும் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது.




மேற்கூரை சரிந்து விபத்து


கோவை மாநகரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. குறிப்பாக காந்திபுரம், டவுன்ஹால், ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இந்த நிலையில் மழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பினால் ஆன மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்களின் ஐந்து இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் அப்பகுதியில் நிற்பது வழக்கம். இன்று விபத்து நேர்ந்த போது அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் நிற்கவில்லை. இதனால் உயிர் சேதம் போன்ற அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.




சாலைகளில் தேங்கிய வெள்ளம்


இதேபோல ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனி பகுதியில் ஒரு மரம் முறிந்து விழுந்ததில் ஒரு கார் சேதமடைந்தது. டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி நின்றது. அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து வெள்ள நீர் அருவி போல கொட்டியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்குள் சூழ்ந்த வெள்ள நீரால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.




பொள்ளாச்சியில் கனமழை


இதேபோல பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. வால்பாறையில் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கவி அருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளம் வரக்கூடும் என்பதால், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று பொள்ளாச்சி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கணபதி நகரில் சாலை நீரில் மூழ்கியது. நீரை வெளியேற்ற முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வெள்ள நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.