திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதி 6 வயது சிறுவன உயிரிழந்த விவகாரத்தில் வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாச்சாங்காட்டு பாளையம் பகுதியை சேர்ந்த ராமன். 31 வயதான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பனியன் தொழிலாளி பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சைலா. இவர்களுக்கு சாய்சரண் என்ற 6 வயது மகனும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சிறுவன் சாய் சரண் பெத்தாம்பாளையம் பகுதியில் ராஜா மெட்ரிக் என்ற தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தான். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைகள் எல்லாம் முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்குச் சென்ற சிறுவன் சாய்சரண் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு பள்ளி வாகனத்திலேயே வீட்டிற்கு வந்துள்ளான்.

வீட்டின் அருகே பள்ளி வாகனத்தில் வந்து இறங்கிய சிறுவன் சாலையில் நடந்து வீட்டுக்கு சென்ற போது, பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மணி என்பவர், சிறுவன் சாலையில் செல்வதை கவனிக்காமல் வாகனத்தை திருப்பி உள்ளார். இதில் பள்ளி வாகனத்தில் பின் பக்க சக்கரத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். இது தெரியாமல் ஓட்டுனர் மணி வாகனத்தை இயக்கியதால் சிறுவன் சாய்சரண் படுகாயம் அடைந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சாய்சரண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பல்லடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மணியையும் தேடி வருகின்றனர். சிறுவனின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனம் மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக செயல்பட்டதே சிறுவன் சாய்சரண் இறப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து திருப்பூரில் இருந்து பொங்கலூர் செல்லும் சாலையில் கள்ளிமேடு பகுதியில் சிறுவனின் பெற்றோர்கள், உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பள்ளி தாளாளர் வர வேண்டும் என்று கோரிக்கையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாகன ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.