திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள கே.பி.சி நகர் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன். 49 வயதான இவர், வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் ஓட்டிவரும் வேனிலேயே இவரது மனைவி லலிதா, வேனில் குழந்தைகளின் உதவியாளராக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 24 ம் தேதியன்று பள்ளி முடிந்த பிறகு சேமலையப்பன் வேனில் பள்ளி குழந்தைகள் ஏற்றிக் கொண்டு, கரூர் ரோட்டில் பழைய காவலர் குடியிருப்பு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே சேமலையப்பன் வேனை ஓரமாக நிறுத்தி விட்டு, லலிதாவிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்
தண்ணீர் குடித்தவுடன் சேமலையப்பன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேமலையப்பனை காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, வரும் வழியிலேயே சேமலையப்பன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், வாகனத்தில் இருந்த குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றும் விதமாக செயல்பட்ட ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
முதலமைச்சர் நிதியுதவி
இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சேமலையப்பன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி பின்னர் தன்னுயிர் நீத்த பள்ளி வேன் ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று காலை சேமலையப்பனின் பெற்றோரான சுப்பன், மற்றும் காவேரி ஆகியோரிடம் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ், திமுக மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் நேரில் சென்று 5 இலட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். நிதியுதவி அளித்த அரசிற்கு சேமலையப்பன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.