மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி உள்ளிட்டவை விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் நடத்தப்படும் கோடை விழா நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டிற்கான துவக்க காட்சியாக இன்று மலர்க்காட்சியும், ரோஜா காட்சியும் துவங்கியது.
மலர் கண்காட்சி துவக்கம்
உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இன்று உலகப் புகழ்பெற்ற 126வது மலர் கண்காட்சி துவங்கியது. இந்த மலர் கண்காட்சி இன்று முதல் 20 ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இதேபோல உதகை ரோஜா பூங்காவில் 19வது ரோஜா கண்காட்சியும் இன்று துவங்கியது. இந்த கண்காட்சியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வருடம் நடைபெறும் 126வது மலர்க்காட்சியில் சுமார் 35,000 மலர்த் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டு பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் மலர்களைக் கொண்டு பிரம்மாண்ட மலர் அலங்காரம் மலர் மாடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 126வது மலர்க்காட்சியினைச் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையிலும் 44 அடி அகலம், 35 அடி உயரத்தில் டிஸ்னி கேசில் பிரம்மாண்ட உருவமும், அதன் கதாபாத்திர உருவங்களான மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூஃபி, புளூட்டோ, டொனால்ட் டக் ஆகியவை ஒரு இலட்சம் கார்னேசன், கிரைசாந்திமம், ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியப்படுத்தும் மலர் அலங்காரங்கள்
நீலகிரி மாவட்டத்தின் பெருமையும், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை இரயிலின் நீராவி என்ஜின் உருவம் 33 அடி நீளம், 20 அடி உயரம், 25 அடி அகலத்தில் 80.000 கார்னேசன், கிரைசாந்திமம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முயல், மலருடன் கூடிய தேனீ. ஆகியவையும் மலர்த்தொட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட மலர் சுவர் (Floral Wall), பிரமிடு மற்றும் பூங்கொத்து ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 19வது ரோஜா காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 80,000 வண்ண ரோஜா மலர்களை கொண்டு வன உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில் யானை, காட்டெருமை, மான், நீலகிரி தார். புலி, பாண்டா, கரடி, ஆந்தை, புறா போன்ற வடிவங்கள் Save Wild Life என்ற கருத்தினை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காட்சியில் தோட்டக்கலை துறையின் சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 126வது மலர்க்காட்சியினையும், 19வது ரோஜா காட்சியினையும் அனைத்து தரப்பு மக்களும் கண்டு இரசித்து மகிழுமாறு தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இலட்சக்கணக்கான பல்வேறு வெளிமாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு இரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகின்ற மே 18ம் தேதியன்று பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.