தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
கோவை மாவட்ட தேர்ச்சி விகிதம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 97.31 சதவீத தேர்ச்சி உடன் அரியலூர் மாவட்டம் முதலிடத்தையும், 82.07 சதவீத தேர்ச்சி உடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. இதில் 94.01 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் 12 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 39 ஆயிரத்து740 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 37 ஆயிரத்து 360 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.46 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.50 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 20 வது இடத்தில் உள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.16 சதவீதமாக உள்ளது. 198 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 153 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 13 ஆயிரத்து 510 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.19 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.58 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்
95.08 சதவீத தேர்ச்சி உடன் ஈரோடு மாவட்டம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 24 ஆயிரத்து 826 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 23 ஆயிரத்து 605 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.10 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.06 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இதேபோல 92.38 சதவீத தேர்ச்சி உடன் திருப்பூர் மாவட்டம் 21 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 30 ஆயிரத்து 180 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 27 ஆயிரத்து 879 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.97 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.76 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.