பாகுபலி காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகள் பத்து நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி என அழைக்கப்படும் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். 'ஆப்ரேஷன் பாகுபலி' என்ற பெயரில் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்த திட்டமிட்டனர். வனத்தில்  சுற்றி திரியும் பாகுபலி காட்டு யானையை பிடிக்க இரண்டாவது நாளாக வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். இன்று காலையில் யானையை நோக்கி துப்பாக்கி மூலம் சுடப்பட்ட மயக்க ஊசி தவறியது.



 

இதனையடுத்து காலை முதல் யானையை பின் தொடர்ந்த வனத்துறையினர் பிற்பகலில், பழங்களை வைத்து யானையை சமதள பரப்பிற்கு கொண்டு முயற்சி மேற்கொண்டனர். சமதள பரப்பிற்கு வந்த காட்டு யானையை வனத்துறையினர் பின் தொடர்ந்த நிலையில் அவர்களிடம் சிக்காமல் யானை மலைப்பகுதிக்குள் சென்றது. 5 மருத்துவ குழுவினர் வெவ்வேறு கோணங்களில் யானை மீது மயக்க ஊசி செலுத்த முயன்றனர். ஆனால் அனைவருக்கும் போக்குக் காட்டிய பாகுபலி யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றது. இரண்டாவது நாளாக வனத் துறையினர் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.



 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "அறிவியல் பூர்வமாக யானையின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள ரேடியோ காலர் பொருத்தப்படுகின்றது. 25 நாட்களாக பின் தொடர்ந்து கண்காணித்து பின்னரே, ரேடியோ காலர் பொருத்த திட்டமிடப்பட்டது. நேற்றும் இன்றும் பல கிலோ மீட்டர் தூரம்  பின் தொடர்ந்த நிலையில் யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மனிதர்களின் நடமாட்டம் தெரிந்து இருப்பதால் அது வனப்பகுதிக்குள் சென்று விட்டது. யானையை பிடிக்க பலவேறு முயற்சிகள் செய்தாலும், குறுக்கும் நெடுக்குமாக சென்றது. வன ஊழியர்களும் இந்த பணியில் திறம்பட ஈடுபட்டார்கள். இதே சூழல் இருந்தால் பாகுபலி யானையை பிடிக்க முடியாது என்பதால் 10 நாட்களுக்கு யானையை கண்காணிக்க மட்டுமே முடிவு செய்துள்ளோம். 10 நாட்கள் கழித்து பாகுபலி யானை இயல்பு நிலைக்கு வரும் போது, அதற்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தப்படும். அதுவரை தொடர்ந்து பாகுபலி யானையை கண்காணிப்பது என முடிவு செய்துள்ளோம். இந்த 10 நாட்களுக்கும் 3 கும்கி யானைகளும் மேட்டுப்பாளையத்திலேயே இருக்கும். பாகுபலி யானை இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அதை பிடித்து ரேடியோ காலர் பொருத்தப்படும்" என அவர் தெரிவித்தார்