கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் குளிக்க வருவோரை ஆற்றில் மூழ்கடித்து கொல்வதாகவும், அவர்களின் உடல்களை மீட்க பணம் பெறுவதாகவும் சமூக வலைதளங்களில் இயக்குனர் பாக்யராஜ் வீடியோ ஓன்றை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து கோவை மாவட்ட காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பவானி ஆற்றில் செயற்கையாக மரணங்கள் ஏற்படுத்தபடுவதாக  பரவும் வதந்திகள் ஆதாரமற்றது எனவும்,  இதுவரை பவானி ஆற்று பகுதியில் இந்த மாதிரியான கொலை சம்பவங்கள்  எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் உள்ள பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள்  வழியாக செல்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


கடந்த 2022-ம் ஆண்டில், பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி  20 நபர்கள் இறந்துள்ளனர் எனவும், அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10  பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023 ம. ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி லைஃப் கார்ட்ஸ் பவானி ஆற்றங்கரையில் ரோந்து சென்று இதுபோன்ற  நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கின்றனர் எனவும், இந்த பிரிவின் முயற்சி காரணமாக, பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2023-ல் 6 ஆக குறைந்து இருப்பதாவும், 2022 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் பதிவாகிய அனைத்து வழக்குகளிலும், முறையான விசாரணை நடத்தப்பட்டு, அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கையே இறப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை,  உண்மையற்றவை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



இதற்கு முன்னதாக பாக்யராஜ் வெளியிட்ட ஒரு வீடியோவில், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனபத்திரகாளியம்மன் கோயில், நெல்லித்துறை, பகுதிகளில் அம்பரம்பாளையம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆறு நீலகிரி மலையில் இருந்து இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆற்றுக்கு சனி ஞாயிறு பிக்னிக் வருபவர்கள், கோயிலுக்கு வருபவர்கள் அங்கே போய் ஆற்றில் இறங்கி நீச்சல் அடிப்பது என்பது வழக்கம். இப்படி நீச்சல் அடிக்கும் போது, என்னவென்று பார்த்தால், சுழலில் சிக்கி தண்ணீர் எங்கோ சுற்றி கொண்டு போய்விட்டது என்று சொல்வார்கள். அப்படி தேடிப்பார்த்தால் உள்ளே உடல் கிடைக்காது, சுழலில் சிக்கி பாறை இடுக்கில் மாட்டியிருப்பார்கள் என்று அந்தபகுதியில் சொல்வார்கள். அப்போது பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் ஒருவர் தண்ணீருக்குள் ரொம்ப நேரம் மூழ்கி இருந்து எடுத்துகிட்டு வருவதற்கு ஒரு ஆள் இருக்கிறார் என்று சொன்னார்கள்.. அப்புறம் அந்த ஆளை போய் கேட்டால், அவரோ இல்லீங்க.. ஐந்துநிமிடம் மூச்சை அடக்கி சுழலில் போய் பார்த்தால் எனக்கே என்னாகும் என்று பயந்தார். அவரிடம் பணம் தருவதாக சொன்னவுடன் 1000 என்று சொல்லியிருக்கிறார்கள்.


ஆனால் முடியாது என்று சொல்ல, 2000, 2500 என ஆட்களை பொறுத்து , எப்படியாவது உடல் கிடைத்தால் போதும் என்று சொன்ன உடன், அவர் ஒரு இடம் தேடுவார்.. அப்புறம் இன்னொரு இடம் தேடுவார்.. அப்புறம் 3 நிமிடம், 4 நிமிடம், ஐந்து நிமிடம் கழிச்சு வெளியே பாடியை எடுத்துக் கொண்டு வருவார். அவரால் ஐந்து நிமிடம் மூச்சை தம் கட்ட முடியும்.. அதன்பிறகு பேசிய பணத்தை உடலை வாங்கியவர்கள் கொடுத்துவிடுவார்கள்.. இது இப்படி அடிக்கடி நடப்பது உண்டு. அதற்கு அப்புறம் தான் பின்னாளில் ஒரு நாள் தெரிந்தது. அந்த இளைஞருக்கு மூழ்கி மூச்சை தம் கட்டும் பழக்கம் இருப்பதால், உள்ளே தண்ணீருக்கு அடியில் மூழ்கி டப்புன்னு காலபுடிச்சு இழுத்து பாறைக்கு இழுத்து சென்று, பாறைக்கு அடியில் சொருகிவிடுவார். அப்புறம் எல்லாம் வந்து தேடும் போது, அந்த இளைஞரே வந்து எடுத்துக் கொடுப்பது போல் வந்து எடுப்பார். இதை தொழில் மாதிரியே ஒருத்தன் பண்ணிக்கொண்டு இருந்தான் என்றால் எவ்வளவு கஷ்டம். ஒருத்தனை அடிச்சு புடுங்குறது, ஏமாற்றி புடுங்குறதை விட மோசமானது. தண்ணீருக்கு அடியில் தம் கட்டுவதற்கான பவர் இருப்பதை தவறாக பயன்படுத்தி எவ்வளவு தப்பா அதை பயன்படுத்தி இருக்கான் என்று நினைக்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை" என அவர் கூறினார்.