மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டம் உயிர்க்கோள காப்பகங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல இம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள், புலிகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்குள் செல்வது வழக்கம்.
சுற்றுலா தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஞ்சப்பனை பகுதியில் ஒரு யானைக் கூட்டம் கடந்த சில நாட்களாக உலா வருகிறது. இரண்டு குட்டிகளுடன் சுற்றி வரும் மூன்று காட்டு யானைகள் உணவு தேடி வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் சென்று வருகின்றன. இதற்காக அடிக்கடி சாலைகளை கடந்து யானைக்கூட்டம் சென்று வருகிறது. இந்நிலையில் இன்று தேயிலை தோட்டத்திற்குள் இருந்து இறங்கிய அந்த யானைக்கூட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது யானைகள் வருவதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்துள்ளனர்.
சிலர் ஆபத்தை உணராமல் யானைகளுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது குட்டியுடன் இருந்த யானைகள் சுற்றுலா பயணிகளை விரட்டியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் யானைகள் எந்த தொந்தரவும் செய்யாமல் அமைதியாக சாலையை கடந்து சென்றன. சுற்றுலா பயணிகள் படம் பிடித்த இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வால்பாறையில் முகாமிட்ட காட்டுயானைகள்
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. இப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, வரையாடு, புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. வால்பாறை அருகே கேரளா வனபகுதி உள்ளதால் காட்டுயானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. தற்பொழுது வால்பாறை சுற்றியுள்ள சின்கோனா, நல்லகாத்து, சிறுகுன்றா, குரங்குமுடி, தாய்முடி ஹைபாரஸ்ட் பகுதிகளில் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் தோயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சத்துடன் உள்ளனர். பகலில் சாலைகளில் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் சாலையில் வாகனங்களில் செல்லும் போது, கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் மேலும் தேயிலை தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு காட்டு யானைகள் வராமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்