நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). கடந்த 19ம் தேதி இரவு காட்டு யானை ஒன்று அவரது வீட்டை சேதப்படுத்தியதோடு, பாப்பாத்தியை தாக்கி கொன்றது. உறவினர்கள் இருவர் காயங்களுடன் தப்பினர். உடற்கூராய்விற்காக காவல் துறையினர் உடலை எடுக்க முயன்ற போது, இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை, உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், உடலை உடற்கூராய்விற்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு பிறப்பிக்கும் வரை பாப்பாத்தி உடலை வாங்க மாட்டோம் என, உறவினர்கள் தெரிவித்ததால் மூன்று நாட்கள் ஆகியும் உடல் ஊட்டி அரசு மருத்துவமனையில் உள்ளது.
இந்நிலையில் கூடலூர் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு நகலைப் பெற, ஊட்டி வனத்துறை அலுவலகத்திற்கு வந்தார். உத்தரவு நகல் இன்னும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் அம்ரித், ஆர்.டி.ஓ., துரைசாமி உள்ளிட்ட வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்த பின், ஒரு மணி நேரத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார்.
இதுகுறித்து ஆட்சியர் அம்ரித் கூறுகையில், ”கூடலூர் தேவாலா பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் பி.எம். 2 என்ற யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார். எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் கூறுகையில், ”பந்தலூர், தேவாலா பகுதியில் பி.எம். 2 யானை கடந்த ஓராண்டில், 45 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. யானையை பிடித்து வேறு பகுதிக்கு விட வேண்டும் என, ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் யானையை பிடிக்கவில்லை என்றால் ஆட்கொல்லியாக உருமாறி மக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்படுவதால், அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையே முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்திலிருந்து யானையை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தலைமையில் இந்த குழு பந்தலூர் பி.எம். 2 என்ற யானையை கூடலூர் வன கோட்டம் சார்பில் கும்கி யானைகளை பயன்படுத்தி மயக்க ஊசி செலுத்தி, 1972 வன விலங்கு சட்டத்தின் கீழ் பாகம் 11 ( 1 ) கீழ், உரிய சட்ட விதிகள் படி இந்த யானையை பிடிக்க வேண்டும். மேலும், யானையின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்த பின், அனுபவம் வாய்ந்த வன கால்நடை மருத்துவர் குழு உதவியோடு பிடித்து, 1972 வன விலங்கு சட்டத்தின் கீழ் பாகம் 4, 8-ஏ ன் கீழ் இந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப் பணியை புகைப்படம், வீடியோ எடுத்து சமர்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்