கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று கோவை விமான நிலையம் வருகை தந்தார். பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பழநியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி வழியாக ஆளுநர் ஆர்.என். ரவி செல்ல உள்ளார். இந்நிலையில் ஆளுநர் வருகைக்கு எதிரிப்பு தெரிவிக்கும் விதமாக பொள்ளாச்சி நகர தி.மு.க.வினர் சார்பில் ’கெட் அவுட் ஆர்.என் ரவி’ என்ற தலைப்பில் ஆளுநரை தபால்காரர் போல சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், “Please Remember.. You are just a Post Man..! நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெறும் போஸ்ட் மேன் மட்டுமே. கெட்அவுட் Mr.R.N Ravi.” என்று குறிப்பிடப்படுள்ளது. இந்த போஸ்டர்களால் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொள்ளாச்சி சாலை, உடுமலை சாலை மற்றும் முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியில் உள்ள லாலி ரோடு பகுதியில் இந்த கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வு எதிர்ப்பு உட்பட பல்வேறு தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும் கல்வித்துறை அறிவித்திருக்கின்ற மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை என ஆளுநர் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆளுநர் பயணிக்கும் சாலையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அண்மையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஆளுநர் ரவி சந்தித்து பேசினார். அப்போது, நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவில் எப்போது கையெழுத்திடுவீர்கள் என பெற்றோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆளுநர் “நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் நான் கையெழுத்து போடமாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கிவிடும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை படித்தாலே மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம்” என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.