கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் விவசாய தோட்டங்களில் விஷம் கலந்த உணவுகளை தூவி காகங்களை கொன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியகவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் சில தினங்களாக தொடர்ந்து காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்ததன. அப்படி இறந்த காகங்களை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதற்கான காரணம் தெரியாமல் அப்பகுதி விவசாயிகள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை நாகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் நிரப்பிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட விவசாயி நாகராஜ் அந்த நபரிடம் விசாரிக்க முற்பட்டார். அப்போது அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் துரத்திச் சென்று அந்த நபரை மடக்கி பிடித்தனர் 


பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் காகங்களைக் கொன்ற சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி சூர்யா (37) என்பதும், வெண்படை நோயை குணப்படுத்த மருந்து தயாரிக்க காகங்களை கொன்றததும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு ஏதேனும் காரணங்களுக்காக காகங்களுக்கு விஷம் வைத்து கொன்றாரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட இறந்த காகங்களை பறிமுதல் செய்தனர். 


இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “இந்த பகுதியில் அடிக்கடி நூற்றுக்கணக்கான காகங்கள் மர்மமான இறந்து வந்ததது. விஷம் வைத்து அந்த நபர் காகங்களை கொன்று வந்துள்ளார்.  விவசாய தோட்டங்களில் கால்நடைகள் உள்ளன. ஒருவேளை விஷம் கலந்த உணவை கால்நடைகள் உண்டால் உயிரிழக்க கூடும். எனவே பிடிபட்ட நபரை தீர விசாரித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண