தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகின்றன. ஆண்டுதோறும் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை, இனிப்பு, கார வகைகளுடன் பட்டாசு, புதிய ஆடைகளை உள்ளிட்டவற்றை பல நிறுவனங்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ஒரு எஸ்டேட் உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு ராயல் என்பீல்டு வாகனங்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சிக்கு தந்துள்ளார்.




மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. அதேபோல தேயிலை உற்பத்தியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ள நிலையில், தேயிலை சார்ந்த தொழில்கள் அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதரமாக தேயிலை தொழில் இருந்து வருகிறது. கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி பகுதியில் சிவக்குமார் பொன்னுசாமி என்ற தொழிலதிபருக்கு சொந்தமான சிவகாமி எஸ்டேட் என்ற தேயிலை தோட்டம் உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் பொன்னுசாமி, கடந்த 20 ஆண்டுகளாக கீழ்-கோத்தகிரி பகுதியில் தேயிலை சாகுபடி, காளான் தயாரிப்பு, கொய்மலர் சாகுபடி, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறார்.




இதனிடையே ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தனது ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்து வரும் சிவக்குமார் பொன்னுசாமி, ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவிகித போனஸ் தொகையும் வழங்கி வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவருடைய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ராயல் என்பீல்டு இரு சக்கர வாகனங்களை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளார். அதேசமயம் இது குறித்து ஊழியர்களிடம் எதுவும் கூறாத சிவக்குமார் பொன்னுசாமி பணியில் இருந்தவர்களை கலந்தாய்வுக் கூட்டம் என அழைத்து, ஒவ்வொருவர் கையிலும் ராயல் என்பீல்டு சாவியை கொடுத்துள்ளார். எதிர்பாராத இந்த பரிசைப் பெற்ற ஊழியர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அப்போது ஊழியர்கள் உடன் உரையாடி சிவக்குமார், ஊழியர்களுடன் சேர்ந்து ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஜாலி ரைட் சென்றார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்து போன ஊழியர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.




அப்போது ஊழியர்கள் இடையே பேசிய சிவக்குமார் பொன்னுசாமி கூறுகையில், ”இந்தளவு இந்த நிறுவனம் வளர அனைவரின் கடின உழைப்பும் தான் காரணம். நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள். நான் உங்களுக்கு கொடுத்துள்ளேன். பணி என்பது முக்கியம் தான். அதைவிட குடும்பம் மிக முக்கியம். எனபே குடும்பத்திற்காக அதிக நேரத்தை ஒதுக்குங்கள்” எனத் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் வழங்கும் தீபாவளி போனஸ் போல் இந்த ஆண்டும் தங்கள் நிறுவனம் ஊக்கத்தொகை வழங்குவார்கள் என எதிர்பார்த்தாகவும், ஆனால் விலை உயர்ந்த ராயல் என்பீல்ட் பைக்கை முதலாளி பரிசாக வழங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். தீபாவளி பரிசாக ராயல் என்பீல்ட் பைக் வழங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.