கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ”இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. பதில் கூற அதிகாரிகளும் வரவில்லை. கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இருந்தது. கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு சான்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது ஒன்று.


அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதாலும், மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என்பதாலும் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட 500, ஆயிரம் கோடி பணத்தை வீண் அடித்துள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே உதரணமாக உள்ளது. அத்திக்கடவு குடிநீர் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை” எனத் தெரிவித்தார். ஆளுநர் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, நன்றி வணக்கம் எனப் பதில் அளித்து விட்டு சென்று விட்டார்.


இதையடுத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், “2019 இல் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் வருடம் அதிமுக ஆட்சியில் இருந்தது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போதிலும், அந்த காலகட்டத்தில் ஒரு அரசு விழாவுக்கும் என்னை அழைக்கவில்லை. ஜனநாயகத்தை பற்றி பேச அதிமுகவினருக்கு யோக்கியதையே கிடையாது. அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. எந்த அரசு விழா அழைப்பிதழிலும் என் பெயரை போடவில்லை. அப்படிப்பட்ட நபர்கள் இன்று ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்கிறார்கள். யாரும் இவர்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போது மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் அனைத்திலும் அவர்கள் பெயர் இடம் பெறுவதை கண்டு அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். நாம் செய்ய தவறியதை திமுக அரசின் நிர்வாகம் செய்கிறது என அவர்கள் வெட்கப்பட வேண்டும்.


இந்தக் கூட்டத்திற்கு நான் தான் சேர்மன், நான் இல்லையென்றால் துணை சேர்மனாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார். மாவட்ட ஆட்சித் தலைவர் இக்குழுவுக்கு செயலாளர். மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லையென்றால் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சப் கலெக்டர் கூட்டத்தை நடத்தலாம் என வழிகாட்டு நெறிமுறைகளே உள்ளது. 5 ஆண்டுகள் பதவியில் இருந்த சூழலில் வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் அவற்றில் 18 சதவீதம் ஜிஎஸ்டியாக 90 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டியாக சென்று விடுகிறது. 4 கோடியே 10 லட்சம் தான் பணம் கிடைக்கும். 3 ஆண்டுகள் மட்டுமே நிதி கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நிதியை கொரோனா பெயரைச் சொல்லி பிரதமர் எடுத்துக் கொண்டு தனி விமானம் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.