கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் மீண்டும் இயங்கத் தொடங்கிய பள்ளிகள், இரண்டாவது கொரோனா அலை பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் மூடப்பட்டது. கொரோனா படிப்படியாக குறைந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன.




இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 1-ந் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.




கோவை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 2064 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5.70 இலட்சம் மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் 19 மாத கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் இனிப்புகள், மலர்கள், பலூன்கள் உள்ளிட்டவை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.




கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சித்தாபுதூர் அரசு பள்ளியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார். இதேபோல பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புகள், பலூன்கள், மலர்கள் உள்ளிட்டவை வழங்கி வரவேற்றனர். மாணவர்களின் உடல் வெப்ப நிலை சோதித்து, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நேரடியாக வகுப்புகளை கவனிப்பதால் எளிதாக படிக்க முடியும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.




பள்ளிகள் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளின் வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், கழிவறைகள் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்புகளில் பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட உள்ளனர். இன்று திறக்கப்படும் பள்ளி வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டிய அவசியமில்லை. பெற்றோர்களின் விருப்பம் இருந்தாலே மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட்டாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையவழி கல்வி முறையும் தொடரப்பட உள்ளது.