கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பல மாதங்களுக்குப் பிறகு ஒன்றாம் முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதேசமயம் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சுவர் விளம்பரம் தொடர்பாக திமுக – அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரை சுவரில் அழித்ததாக கூறி, அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த திமுகவினரை அதிமுகவினர் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான நீலகிரி மலை இரயில் சேவை மேலும் 15 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. இரயில் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இரயில் சேவை வருகின்ற 15 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம் இன்று 156 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1865 ம் ஆண்டு சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியை எட்டியுள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக தொடர்ந்து அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் இந்த வாரத்தில் மேட்டூர் அணையின் முழு கொள்ளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேட்டூர் அணையின் நீர் பச்சை நிறமாக மாறியதற்கு கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றில் கலக்கப்படும் தொழிற்சாலை கழிவுகள் தான் காரணம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


தர்மபுரி மாவட்டம் அரூரில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி சென்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 1.60 இலட்ச ரூபாய் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்றுக்குள்ளான மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் முட்டைகள் கொள்முதல் விலை 10 பைசா உயர்ந்துள்ளது. இதனால் ஒரு முட்டையின் விலை 4.55 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.