நீலகிரியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் குன்னூர் அருகே உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தலா அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாயை நிபந்தனை தொகையாக வழங்குமாறு நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக திமுகவை சேர்ந்த கா.ராமசந்திரன் பதவி வகித்து வருகிறார். மேலும் சுற்றுலா துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டேண்மெண்ட் போர்டு துணை தலைவர் தேர்தலின் போது அதிமுக - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதிமுகவினர் 10 பேர் கண்டோண்மெண்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். அப்போது துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க 4 கவுன்சிலர்களை, அப்போதைய குன்னூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கா.ராமசந்திரன் மற்றும் குன்னூர் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி ஆகியோர் ஆகியோர் அழைத்து சென்ற போது மோதல் ஏற்பட்டது. அதில் அதிமுகவை சார்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டதுடன், சட்டமன்ற உறுப்பினர் கா.ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகாத சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அத்தொகையை குன்னூர் அருகே எடபள்ளியில் உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் எனவும், அடுத்த வழக்கு விசாரணைக்கு கட்டாயமாக ஆஜராகுமாறும் நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார். அதே போல அப்போதைய கண்டோண்மெண்ட் தலைவரும் தற்போதைய அதிமுக ஒபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளருமான பாரதியார் மற்றும் அப்போதைய திமுக கவுன்சிலர் வினோத் ஆகியோர் இன்று ஆஜராகாததால் அவர்களும் தலா 10 ஆயிரம் ரூபாயை அந்த அறக்கட்டளைக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்