குன்னூரில் மோசமான வானிலை ; குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் குன்னூர் பயணம் இரத்து

இன்று காலை கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று உரையாற்றுவதாக இருந்தது.

Continues below advertisement

குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக திரெளபதி முர்மு நேற்று இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். மதுரைக்கு சென்ற அவர், விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Continues below advertisement

பின்னர் கார் மூலம் பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஈஷா யோகா மையத்தை சுற்றிப் பார்த்த அவர், சூர்ய குண்டம், நாகா சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து லிங்க பைரவி கோவிலுக்கு சென்று தாக நிவாரணம் உள்ளிட்ட அர்ப்பணங்களை செய்தார்.  பின்னர் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத க்ரியையில் பங்கேற்றார். 


இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர்,  இன்று காலை கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று உரையாற்றுவதாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் குன்னூரில் மேகமூட்டம் மற்றும் மழை தூறலாக இருந்தது. தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால், குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு 12.15 மணியளவில் கோவை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் டெல்லி செல்கிறார். குடியரசு தலைவர் வருகை காரணமாக கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் திரெளபதி முர்மு,  அஉம் நமசிவாய என்ற மந்திரத்துடன் உரையை தொடங்கினார். விழாவில் அவர் பேசியதாவது,  "அஉம் நமசிவாய. சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த புனித மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன். உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகின்றன. அவையனைத்திற்குமான மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார் அதே வேளையில் சந்நியாசியாகவும் இருக்கிறார். அவர் தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார். முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகவும் சிவன் விளங்குகிறார்.


ஆக்கும் மற்றும் அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாகவும் இருக்கிறார். அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மஹாசிவராத்திரி விளங்குகிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நவீன காலத்தின் போற்ற தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு அவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மீக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். குறிப்பாக ஏராளமான இளைஞர்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார். 

அவருடைய பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆன்மீகம் மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வையும் கற்றுக்கொடுக்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். இந்த மஹா சிவராத்திரி நன்நாள் நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும். மேலும் வளர்ச்சியும் நிறைவும் நிறைந்த வாழ்வை நமக்களிக்கட்டும். இந்த மஹா சிவராத்திரியின் நல்லொளி நம் ஒவ்வொரு நாளின் பாதையையும் பிரகாசமாக்கட்டும்" எனத் தெரிவித்தார்.

Continues below advertisement