கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட திரையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு திரையரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் மோகன் உள்பட கல்லூரி் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”இந்திய சினிமா பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர அமிர்தப்பெரு விழாவை கொண்டாடும் இந்த சூழலில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்து பெருமை சேர்த்தது தமிழ் சினிமா. சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், 75 இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களது படைப்புகள் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டது” எனத் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசும் போது, ”வெளிநாடுகளில் இருந்து திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு மத்திய அரசாங்கம் சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளதை குறிப்பிட்டு, இன்று தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியாவை கடந்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாடு தயாரிப்பு நிறுவனங்களுக்கு 3 கோடி வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. RRR, பாகுபலி போன்ற தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. மொழிகளைக் கடந்து நல்ல கருத்து கொண்ட சினிமா மற்றும் தொழில்நுட்பம் என்பதால் அவை சர்வதேச அளவிற்கே சென்று விட்டது. திரைப்படங்கள் எடுக்க அனுமதி பெற சிங்கிள் வின்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


படப்பிடிப்புக்கான அனுமதி எளிமையாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அரசு கருத்து சுதந்திரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கிறது. அரசியல் சார்ந்த திரைபடங்களில் யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுப்பது கிடையாது. காங்கிரஸ் ஆட்சி மாதிரி இல்லை. இதேபோன்று திரைப்படங்களுக்கு மொழிகள் பிரச்சனை இல்லை. கரு (content) தான் முக்கியம். இன்றைய திரைப்படங்கள் இந்தியாவை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்கின்றன. திரையரங்களில் நடக்கும் வன்முறைகள் மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு சம்பந்தமானது” எனத் தெரிவித்தார்.


தமிழ்நாடு என்பதை தமிழகம் என அழைக்க வேண்டுமென்ற ஆளுநரின் சர்ச்சை கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, ”தமிழ்நாட்டை தமிழகம் என சங்க இலக்கியங்களில் சொல்லபட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழகம் என குறிப்பிடப்பட்டுள்ளார்கள்” என பதிலளித்தார்.


இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மோகன், ”காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்லூரி வளாகத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்பது இந்தியாவிலேயே முதல்முறை என்பது பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்தார்.
பொங்கல் வெளியிட்டு படங்களில் எந்த படத்தை முதலில் பார்த்தீர்கள் என்ற கேள்விக்கு, ”துணிவு, வாரிசு எதற்கு முதல் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன். விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான். ரஜினி தான் சூப்பர் ஸ்டார். அந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. படத்தின் வெற்றி இயக்கத்தின் கையில் தான் இருக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தால் நடிப்பேன். கதை இயக்கம் பிடித்தால் மட்டும் தான் படத்தில் நடிப்பேன்” எனத் தெரிவித்தார்.