மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’ என்றும், கைகளில் ’திமுக ஒழிக’ என்றும் எழுதியபடி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்த யூடியுப்பரும் பாஜக ஆதரவாளருமான மாரிதாஸை மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் , தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனியார் தொலைக்காட்சி குறித்து போலி இமெயில் மூலம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அவரது நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’ என்றும் கைகளில் ’ஃபாரின் மதநெறி திமுக சிற்றரசு ஒழிக’, ‘எல்லா புகழும் நம் நாட்டு சாமிக்கே. பாரின் மத God no ues’ என்றும் எழுதி வந்தார். 'Use' என்பதை ‘Ues' என தவறாக எழுதியிருந்தார்.
கந்தசாமியிடம் செய்தியாளர்கள் விசாரித்த போது ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்கவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ வரவில்லை எனவும், முறையான பதிலளிக்காமல் மலுப்பலான பதில்களை தெரிவித்தார். மாரிதாசை எதற்காக கைது செய்தனர் எனக் கேட்டதற்கு, “அந்தளவிற்கு எனக்கு டிடெயில்ஸ் தெரியாது. ஏனா நான் உணர்வில் தான் இருக்கிறேன். நான் எந்த கட்சியிலும் இல்லை. எந்த இயக்கத்திலும் இல்லை. இந்த நாட்டில் இந்து என்ற உணர்வில் தான் இருக்கிறேன்” என்றார். மாரிதாஸ் யார் எனத் தெரியுமா செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஓ தெரியுமே. நியாயமாக பேசுபவர்” என பதிலளித்தார்.
இதையடுத்து பந்தயசாலை காவல் துறையினர் கந்தசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனி ஒருவனாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாசகங்களை எழுதி வந்த நபரால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.