கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.


இந்நிலையில் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் அடையாளத்தை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் அவரது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால், அந்த முகவரி குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. சம்பவ இடத்தில் காவல் துறை உயரதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.




இதனிடையே காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையிலிருந்து தடைய அறிவியல் குழுவினர் கோவைக்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.





கோவை மற்றும் மாநில கமாண்டோ குழுவைச் சேர்ந்த பாம்ப் ஸ்குவாட் குழுக்களும் ஆய்வு செய்து வருகின்றனர். மோப்ப நாய் மூலமும் ஆய்வு செய்யப்படுகிறது. காரில் 2 கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளது. அதில் ஒன்று வெடித்துள்ளது. எங்கிருந்து இவை வாங்கப்பட்டன என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான வாகனம் மாருதி கார் என தெரிய வந்துள்ளது. அதன் பழைய உரிமையாளர்கள் மற்றும் புதிய உரிமையாளர் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உயிரிழந்தவரின் அடையாளங்களை சேகரித்து அவர் யார் என புலன் விசாரணை செய்து வருகிறோம். காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.




இதனிடையே காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கைப்பற்றிய தடயவியல் துறையினர் கார் வெடித்தற்கான காரணங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண