நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை குட்டியை மீட்ட வனத் துறையினர், தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்னும் சில நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்லட்டி மலைத் தொடர்களில் ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள், ஏற்பட்டு மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கல்லட்டி மலைப் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகளும், மரங்களும் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மாநில நெடுஞ்சாலை துறையினர் கொட்டும் மழையில் சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் முதுலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி அருகே சிங்காரா வனச்சரகப் பகுதி உள்ளது. இப்பகுதியில் மாவனல்லா என்ற கிராமம் உள்ளது. உதகை, மசினகுடி, கூடலூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் மசினகுடி பகுதியில் பெய்த மழையில் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவனல்லா பகுதியில் உள்ள சீகூரல்லா ஆற்றில் ஒரு யானைக்குட்டி ஆற்றில் அடித்து வரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதன் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் யானைக்குட்டியை பத்திரமாக மீட்டு, ஆற்றில் இருந்து வெளியே எடுத்தனர். குட்டி யானை பிறந்து சுமார் ஒரு மாத காலம் இருக்கலாம் எனவும், யானைகள் கூட்டமாக ஆற்றைக் கடந்த போது குட்டி யானை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து வனத்துறையினர்யானை குட்டியை சடாபட்டி வனப் பகுதிக்கு எடுத்துச் சென்று தாய் காட்டு யானையிடன் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குட்டி யானையின் காட்டு யானைக் கூட்டத்தை கண்டறிந்து, அவற்றிடம் குட்டி யானையை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.