வார விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் உடன் இணைந்து இயற்கையை இரசித்து, இன்புற பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறீர்களா?. இதோ உங்களுக்காகவே காத்திருக்கிறது, பரளிக்காடு சூழல் சுற்றுலா தலம். கோவை மாவட்டம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் இயற்கையின் எழில் மாறாமல் இருக்கும் மலைக் கிராமம், பரளிக்காடு. பில்லூர் அணைக்கு அருகே அமைந்துள்ள இந்த பகுதி, ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் பவானி ஆற்றில் பரிசல் பயணம், சுவையான உணவு, வனத்திற்குள் நடைபயணம், பவானி ஆற்றில் குளியல் என அட்டகாசமான பயண அனுபவத்தை பரளிக்காடு தரக்கூடும். இதனால் பரளிக்காடு சுற்றுலா தலம் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக இருந்து வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு உகந்த இடமாக உள்ளது. இந்த சூழல் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பழங்குடியின மக்களுக்கு செலவிடப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பரளிக்காடு சூழல் சுற்றுலா தளத்திற்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், பல்வேறு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டாலும், பரளிக்காட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இந்த வாரம் முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா பயணிகள் www.combatorewilderness.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்படுமெனவும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 550 ரூபாயும், 5 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 450 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பயணிகள் சொந்த வாகனம் அல்லது பொது போக்குவரத்து மூலம் பரளிக்காடு செல்லலாம் எனவும், பழங்குடியினர் தயாரித்த உணவு வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பவானி ஆற்றில் பரிசலில் பயணம் செய்து பில்லூர் அணையை கண்டு இரசிக்க முடியும் எனவும், மாலையில் பவானி ஆற்றில் குளியலோடு சுற்றுலா முடியும் எனவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். பரளிக்காடு சூழல் சுற்றுலா தலத்திற்கு செல்ல முன்பதிவு துவங்கியிருப்பது சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.