தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அந்த மக்னா யானையை பிடிக்க கோரி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். கடந்த 5 ம் தேதியன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் வனத் துறையினர் கும்கி யானை உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து கடந்த 6 ம் தேதியன்று அந்த யானை கோவை மாவட்டம் டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

Continues below advertisement


வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின்னர் நேற்று கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களை கடந்து, கிணத்துக்கடவு வழியாக மதுக்கரை பகுதியை நோக்கி யானை நடந்து வந்தது. மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.




இந்நிலையில் சுமார் 140 கி.மீ. தூரத்திற்கும் மேலாக நடந்து பல்வேறு கிராமங்களை கடந்து கோவை மாநகரப் பகுதியை மக்னா யானை அடைந்தது. குனியமுத்தூர் அருகேயுள்ள செந்தமிழ் நகர், அறிவொளி நகர், பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை சுற்றித் திரிந்தது. குரும்பபாளையம் பகுதியில் எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையில் தள்ளி விட்டு சென்றது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணா கல்லூரி பின்புறம் உள்ள செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள புதர்மண்டிய பள்ளத்தில் யானை காலை முதல் மாலை வரை நின்றது.


மாலை நேரத்தில் யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், யானை பி.கே.புதூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. வீடுகள் நிறைந்த தெருக்களில் உலா வந்த யானை, அப்பகுதியில் இருந்த சுடுகாட்டின் மதில் சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




இந்நிலையில் கோவை மாநகராட்சிக்குள் யானை தொடர்ந்து சுற்றி வருவதால் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பணிக்கு உதவியாக டாப்சிலிப் கும்கி யானைகள் முகாமில் இருந்து கலீம், சின்னத்தம்பி, முத்து ஆகிய மூன்று கும்கி யானைகள் கோவை கொண்டுவரப்பட உள்ளது. இந்த யானைகள் வந்தவுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் தயாராக உள்ளனர். அதேசமயம் வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்து தப்பிய யானையை, தேடும் பணியில் வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண