கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் பகுதி அருகில் சகாரா சிட்டி என்ற இடத்தில் கடந்த 17 ம் தேதியன்று, ஒரு காட்டு மாடு நடமாடுவதாக பொதுமக்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் 30 பேர் கொண்ட குழுவினர் நிகழ்விடத்திற்கு வந்து, காட்டு மாடு குறித்து விசாரித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து காட்டு மாடு விநாயகபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றது. அங்கு சென்ற வனத்துறையினர் அதனை பின்தொடர்ந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வந்தனர். காட்டு மாடு பன்னிமடை வனப்பகுதியில் இருந்து வழிதவறி நகரப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.
பொதுமக்களுக்கோ அல்லது காட்டு மாடிற்கோ எவ்வித தொந்தரவுகளும் நேராத வண்ணம் பாதுகாப்பாக வனத்துறையினர் பின் தொடர்ந்து சென்றதுடன், வழியிலுள்ள பொதுமக்களுக்கும் எச்சரிக்கைகள் வனத்துறையினரால் தரப்பட்டது. காட்டு மாடினை பிடிப்பதற்கான தக்க சூழல் இல்லாத நிலையிலும், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் மிரண்டு ஓடியது. இதனிடையே இரவு நேரத்தில் காட்டு மாடினை பின் தொடர்வதிலும், தொடர்ந்து கண்காணிப்பதும் கடும் சிரமங்கள் நிலவியது. சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி என காட்டு மாடு இடம் பெயர்ந்து சென்றது. காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியிலிருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்ற காரணத்தினால் அதனை பின்தொடர இயலாமல் சுற்றி வந்து தேடிய நிலையில் காட்டு மாடு வனத்துறையினர் கண்காணிப்பு வளையத்திலிருந்து விலகி சென்றது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நகரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த காட்டு மாடு, இன்று காலை சின்னியம்பாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. மயிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரையான்பாளையம் என்ற இடத்தில் புதர் மண்டிய பகுதியில் காட்டு மாடு நின்றது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை வெளியே வர விடாமல் தடுக்க பொதுமக்கள் முயற்சித்து வருகின்றனர். காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறையினர் திட்டமிட்டனர்.
சந்திர சேகர் என்ற கவுன்சிலர் வீட்டினருகில் காலி மனையிடத்தில் காட்டு மாடு நின்றது. அப்போது மருத்துவக் குழுவினர் காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கமுற்ற காட்டு மாடின் உடல் நிலையினை சோதித்த மருத்துவர்கள், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காட்டு மாட்டினை வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
காட்டு மாடு கிரேன் இயந்திரம் மூலம் தூக்கி வனத்துறை வாகனத்தில் வைக்கப்பட்டது. மருத்துவர் குழுவின் கண்காணிப்புடன் காட்டு மாடு கொண்டு செல்லப்பட்டு கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் வனப்பகுதியில் மயக்கம் தெளிய வைக்கப்பட்டு, காட்டு மாடு விடுவிக்கப்பட்டது.. இதையடுத்து காட்டு மாடு வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து சில நாட்கள் காட்டு மாடினை தனிக்குழு அமைத்து கண்காணிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்